டாடா குழுமத்தில் என்ன நடக்குது… நோயல் தரப்புக்கும் டாடா சன்ஸுக்கும் இடையே முற்றும் விரிசல்?

By Minnambalam Desk

|

Published on 12 Nov 2026, 10:16 PM

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தில், நிர்வாக அதிகாரம் தொடர்பாகப் புது சர்ச்சை கிளம்பியுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

டாடா அறக்கட்டளைகளின் (Tata Trusts) தலைவர் நோயல் டாடா தொடர்புடைய நிறுவனங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட தலைவர் நியமனங்கள், டாடா சன்ஸ் நிர்வாகத்துடன் கருத்து வேறுபாட்டை உண்டாக்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

70 வயதை எட்டியதால் நோயல் டாடா சில நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதன் பிறகு நடக்கும் நிர்வாக மாற்றங்கள், குழுமத்துக்குள் அதிகாரப் போட்டி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

புதிதாக யார் யார்?

ADVERTISEMENT

ட்ரென்ட் (Trent), டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், வோல்டாஸ் (Voltas), டாடா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களில் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

  • பஹ்ராம் வகில் – ட்ரென்ட், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்
  • சுனில் டிசோசா – வோல்டாஸ்
  • டிவி நரேந்திரன் – டாடா இன்டர்நேஷனல்

இந்த நியமனங்களுக்கு டாடா சன்ஸின் வழக்கமான முன்ஒப்புதல் வாங்கப்படவில்லை என்று தகவல்கள் சொல்கின்றன.

ADVERTISEMENT

டாடா சன்ஸ் ஏன் அதிருப்தி?

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் இந்த நியமனங்களால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குழும நிறுவனங்களின் முக்கிய நிர்வாக முடிவுகள் மையத்தின் ஒப்புதலோடுதான் எடுக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை என்று டாடா குழும வட்டாரங்கள் சொல்கின்றன.

ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக முடிவெடுக்கத் தொடங்கினால், குழுமத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பே பாதிக்கப்படலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. இது ஒருவிதமான இரட்டை அதிகார மையத்தை உருவாக்கிவிடுமோ என்ற பேச்சும் உள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது?

நோயல் டாடா தரப்பு வேறு விளக்கம் தருகிறது. அவர் ஓய்வு பெறுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அடுத்து யார் என்பது குறித்த ஆலோசனைகளை டாடா சன்ஸ் உரிய நேரத்தில் தொடங்கவில்லை என்பது அவர்களின் வாதம்.

நிறுவனங்கள் சட்டம் 2013-ன்படி, ஒரு நிறுவனத்தின் தலைவரை அதன் இயக்குநர் குழுவே தேர்வு செய்யலாம். அந்த நிறுவனத்தின் விதிமுறைகளில் குறிப்பிட்ட ஒப்புதல் கட்டாயம் என்று எழுதப்பட்டிருந்தால் மட்டுமே டாடா சன்ஸின் அனுமதி சட்டப்படி தேவைப்படும் என்று சட்ட நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel