ஜெம் வீரமணி வழக்கு: 720 பக்க குற்றப்பத்திரிகை – அருண் ஐபிஎஸ் பெயர் சேர்ப்பு!

By Kavi

|

Published on 12 Nov 2026, 11:17 PM

ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் 720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபரான வீரமணி ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

இந்த வழக்கை தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரித்து வரும் நிலையில் போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை இன்று (நவம்பர் 12) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு (CCB) குற்ற எண் 174/2025-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற வழக்குகளை விசாரிப்பதற்காக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவரால் (DGP/HoPF) 24.09.2026 அன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team) அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது தாயார் அளித்த புகார்களின் அடிப்படையில், மொத்தம் ஒன்பது பாதிக்கப்பட்டவர்களைச் சார்ந்து புதிதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த 7 வழக்குகளில், AVS-1 பிரிவு குற்ற எண்.11/2026-ல் 11.11.2026 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் 27.09.2026 அன்று பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியை, முதல் எதிரியான வீரமணி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். மேலும், இக்குற்றம் குறித்து தெரிந்திருந்தும், இரண்டாவது எதிரியான பார்த்திபன் மற்றும் மூன்றாவது எதிரியான பாபு ஆகியோர், பாதிக்கப்பட்ட சிறுமியை வாகனத்தில் அழைத்துச் சென்று, வீரமணியின் இருப்பிடத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட முதல் எதிரி வீரமணி மற்றும் அவரது ஓட்டுநர்களான இரண்டாவது எதிரி பார்த்திபன் மற்றும் மூன்றாவது எதிரி பாபு ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் (IPC) 366, 506(2), போக்சோ சட்டம் (POCSO Act) பிரிவுகள் 5(l)(m)(i) உடன் இணைந்த பிரிவுகள் 6 மற்றும் 17, மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் (SC/ST Act) பிரிவுகள் 3(1)(w)(I) 3(2)(v) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுமார் இவ்வழக்கில், வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 46 நாட்களுக்குள், 720 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை, 40 சாட்சிகளுடன் தயாரிக்கப்பட்டு, 11.11.2026 அன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில், ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட சமயத்தில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், டிஎஸ்பி யாஸ்மின் உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel