ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் காலமானார்!

By Kavi

|

Published on 13 Nov 2026, 12:37 PM

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் இன்று (நவம்பர் 13) காலமானார்.

ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் 1955ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கர்நத்தம் கிராமத்தில் பிறந்தவர். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில், உச்ச நீதிமன்றம், நீதிபதி கர்ணனை கொல்கத்தா மாநில உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி ஓய்வு பெற்றார்.

ADVERTISEMENT

தான் நீதிபதியாக பொறுப்பேற்றது முதல் தொடர் சர்ச்சையில் சிக்கியவர் ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்.

2017 ஆம் ஆண்டு  20 நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார்.

ADVERTISEMENT

கர்ணனின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்தது. தொடர்ந்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், கர்ணனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்தசூழலில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகவும் மேலும் ஏழு நீதிபதிகளுக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கும் உத்தரவை கர்ணன் பிறப்பித்தார்.  இதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

தொடர்ந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த உச்ச நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல், உத்தரவை மதிக்க தவறியதால் கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் கர்ணன் தலைமறைவானார். பின்னர் கோவையில் தங்கியிருந்த அவரை 2017 ஜூன் 21ஆம் தேதி கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். ஆறு மாத சிறை தண்டனை முடிந்து விடுதலையானார்.

பதவியில் இருந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

தொடர்ந்து, சென்னையில் வசித்து வந்த சி.எஸ்.கர்ணன், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 13) காலை காலமானார்.

அவரது மறைவுக்கு நீதித்துறையில் இருந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel