தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக தீபாவளி நாளில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சட்டம்-ஒழுங்கு குறித்த விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.
இந்தசூழலில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை குறிப்பிட்டு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று (நவம்பர் 13) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பாரா ரீல் முதல்வர்
பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
மதுரையில் பிரபல நகைக்கடை தனிஷ்க்-ல் 50 கோடி மதிப்புள்ள நகைகொள்ளை.. காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம் 1.5 கோடி கொள்ளை.. நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகை கொள்ளையடித்த தவெக நிர்வாகி.. விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை கொள்ளை. திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை..
நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் தெருவிளக்குகளை அணைத்து 7 வீடுகளில் கொள்ளை முயற்சி. இப்படி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையர்களின் கை ஓங்கி, மக்கள் பயத்தின் பிடியில் உறைந்து போயிருக்கும்போது கூட மௌன விரதத்தில் இருந்து கலைய மாட்டேன் என்றால் எப்படி?
Confident ah இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசினீங்களே! இந்த வசனம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்ல குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா? நீங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் அதேநேரத்தில் தான் இங்கே பல குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல் முதல்வர் அவர்களே! உங்கள் “Action” எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா?
இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு, உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.








