OBC அந்தஸ்து நிரந்தரம் அல்ல.. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான BC, MBC இடஒதுக்கீடு செல்லுமா? ஜி.ஆர்.சுவாமிநாதன் பெஞ்ச் கேள்வி!

By Mathi

|

Published on 13 Nov 2026, 1:43 PM

Madhurai Bench-BC OBC Reservation

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) அந்தஸ்து நிரந்தரமானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படும் BC, MBC இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜி.கோடீஸ்வரன். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்த குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

கள்ளர் சமூகம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டம், 2016 (Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016) என்ற சட்டத்தின் கீழ், கிறிஸ்தவ நாடார், சாணார், கிராமணி உள்ளிட்ட சமூகத்தினருக்கும், மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவர் உள்ளிட்ட சமூகங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடஒதுக்கீட்டு அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து கோடீஸ்வரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று நவம்பர் 12-ந் தேதி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

இந்த விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சுரேஷ் ஆஜராகி வாதிட்டார். அப்போது, தற்போதைய சட்ட விதிகளின்படி பிராமணர் ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, தென்னிந்திய திருச்சபையான CSI அமைப்பில் சேர்ந்தால்கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அந்தஸ்தைப் பெற முடியும் என்று வாதிட்டார்.

மேலும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய குறிப்பிட்ட சமூகத்தினரைப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களில் சேர்த்ததற்குப் போதுமான புள்ளிவிவர ஆதாரங்கள் இல்லை என்றும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களின் பரிந்துரைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பட்டியலில் இடம்பெற்றிருப்பது நிரந்தரமான, மாற்ற முடியாத அந்தஸ்து அல்ல (There is nothing axiomatic or eternal about one’s OBC status).

ஒரு சமூகத்தை OBC பட்டியலில் சேர்ப்பதற்கும், ஏற்கெனவே அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சமூகத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் தெளிவான காரணங்கள் இருக்க வேண்டும். சில சமூகங்கள் பல ஆண்டுகளாக இடஒதுக்கீட்டுச் சலுகைகளை அனுபவித்து வருகின்றன என்பதற்காக மட்டுமே, அவற்றை ஆரம்பத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது அரசியலமைப்புச் சட்டப்படி சரியானது என்று கருத முடியுமா? முடியாது என்பதே எங்கள் பதில்.

ஒரு சமூகத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததையோ, தொடர்ந்து வைத்திருப்பதையோ நீதிமன்றத்தில் எதிர்த்தால், அந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டப்படி நியாயமானது என்பதை நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் அரசு நிரூபிக்க வேண்டும்.

பிராமணர் மதம் மாறினால் OBC அந்தஸ்தா?

பிராமணர் ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, CSI திருச்சபையில் சேர்ந்தால், தற்போதைய சட்ட விதிகளின்படி OBC அந்தஸ்தைப் பெற முடியும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியது எங்களை ஆச்சரியப்படுத்தியது (The Petitioner’s counsel startled us by asserting that if a Brahmin gets converted and joins CSI denomination, he can enjoy OBC status as per the present statutory framework).

வழக்கறிஞரின் இந்தக் கூற்று உண்மையாக இருந்தால், இந்த விவகாரத்தைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் (If this assertion is true, then a serious re-think is certainly called for) என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டநாதன், அம்பாசங்கர் ஆணையங்கள் என்ன கூறின?

மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் பதிவு செய்துள்ளனர். அவற்றின் விவரம் வருமாறு:

1970-ஆம் ஆண்டு சட்டநாதன் தலைமையிலான முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கிறிஸ்தவ சமூகங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய மறுத்ததாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, 1985-ஆம் ஆண்டு அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களைப் பட்டியலில் சேர்ப்பதை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அம்பாசங்கர் ஆணையம் தனது அறிக்கையில், Christian (Converts from B.C.) என்ற பிரிவை, சேர்ப்பதற்குத் தகுதியற்ற சமூகங்களின் பட்டியலில் 902 என்ற குறியீட்டு எண்ணுடன் இடம்பெறச் செய்திருந்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இந்தப் பரிந்துரையைப் புறக்கணித்து 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 558 மூலம், இந்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக மனுதாரர் வாதிட்டுள்ளார்.

இதற்கு முன்பாகவே, 1983-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 2029 மூலம் கிறிஸ்தவ நாடார், சாணார், கிராமணி ஆகிய சமூகங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் CSI கிறிஸ்தவர்கள் ஆகியோர், முந்தைய திருவிதாங்கூர்–கொச்சி மாநிலத்தில் வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தமிழகப் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சமூகங்களின் சமூக, கல்வி நிலையை நிரூபிப்பதற்குத் தேவையான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படவில்லை என்பதே மனுதாரரின் குற்றச்சாட்டாகும்.

இந்திரா சஹானி, எம்.நாகராஜ், தவேந்தர் சிங், ராம் சிங் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மனுதாரர் தரப்பு மேற்கோள் காட்டியுள்ளது.

ஒரு சமூகத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கான முடிவு முறையான ஆய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், பழைய புள்ளிவிவரங்களையோ வரலாற்றுச் சலுகைகளையோ மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றும் வாதிடப்பட்டுள்ளது.

மேலும், சமீர் அகமது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, ஒருவர் மதம் மாறுவதால் மட்டுமே அவருக்குப் புதிய பிறப்புவழிச் சமூக அடையாளம் உருவாகிவிடாது என்றும் மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திருச்சபையில் சுமார் 40 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகவும், 2024–25 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.3,067 கோடியாக இருந்ததாகவும் மனுதாரர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் CSI திருச்சபையில் சேர்வதன் மூலம் மட்டும் பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்தைப் பெற முடியும் என்றால், இடஒதுக்கீட்டுக்கான சமூக அந்தஸ்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் தனியார் மத அமைப்பிடம் சென்றுவிடும் என்று மனுதாரர் வாதிட்டுள்ளார்.

பட்டியலின சமூகங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் BC பிரிவில் சேர்க்கப்படும் நிலையில், மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவர் உள்ளிட்ட குறிப்பிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து மதம் மாறியவர்கள் தொடர்ந்து MBC அந்தஸ்தைப் பெறுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மதமாற்றத்திற்குப் பிறகு வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறு இடஒதுக்கீட்டு நடைமுறைகள் இருப்பது சமத்துவ உரிமை தொடர்பான கேள்விகளை எழுப்புவதாகவும் வாதிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கு நோட்டீஸ்

மனுதாரர் தரப்பு முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்ததில், இந்த வழக்கை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆழமாக விசாரிக்க வேண்டிய ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சமூகங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், வல்லுநர் ஆணையங்களின் பரிந்துரைகள் வெளிப்படையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், சமூகங்கள் முறையற்ற வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், அந்தச் சமூகங்களுக்கு BC, MBC இடஒதுக்கீட்டு அந்தஸ்து வழங்கும் சட்ட விதிகள் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற தீவிரமான சந்தேகங்களை எழுப்புகின்றன என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

(In view of the aforesaid submissions of the Petitioner, we are satisfied that the petitioner has established a prima facie case that warrants deep constitutional scrutiny. The factual assertions regarding the lack of objective data, the explicit disregard of the Recommendations of the Expert Commissions, and the arbitrary nature of the classifications raise serious doubts about the constitutional validity of the impugned entries in Schedule I of the 2016 Act.)

இதையடுத்து, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த நோட்டீஸ் 8 வாரங்களில் திரும்ப வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC-யையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் 4-வது எதிர்மனுதாரராகச் சேர்த்துள்ளது.

TNPSC தேர்வு தொடர்பான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதால், இந்த வழக்கில் அவசரம் இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு விவரம்:

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel