காங்கிரஸ் கட்சியை நம்புவது முட்டாள்தனம் என்றும், முதல்வர் விஜய் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவரும் தமிழக மேலிடப் பொறுப்பாளருமான ராம் மாதவ் எச்சரித்துள்ளார். காங்கிரஸை நம்ப முடியாது என்பது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்கெனவே தெரியும் எனக் கூறிய அவர், நல்ல வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் உடனடியாக வேறு கட்சிக்குச் சென்றுவிடும் என்றும் விமர்சித்துள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ் இன்று (நவம்பர் 13) செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலில் நமது எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் தேசிய அளவில் விவாதிக்கப்படும் ஒரு முக்கியமான விவகாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதுதான் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி.
காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நவம்பர் மாதத் தொடக்கத்தில் டெல்லியில் ஒரு பேரணியையும் நடத்தினர். 23 அரசியல் கட்சிகள் பங்கேற்றதாகக் கூறப்பட்ட அந்தப் பேரணியில் சுமார் 50,000 பேரைத்தான் திரட்ட முடிந்தது. ஒவ்வொரு கட்சியும் 2,000 பேர் அல்லது அதற்கும் குறைவானவர்களையே அழைத்து வந்திருந்தன. தேசிய அளவிலான மிகப்பெரிய பேரணி என்று அவர்கள் கூறினாலும், உண்மையில் அது ஒப்பீட்டளவில் சிறிய பேரணிதான்.
அந்தப் பேரணியின் முக்கியமான கோரிக்கை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான். அடிப்படையில் இது காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான விவகாரம். காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் திறன் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையம் பதிலளித்தும் இருக்கிறது.

90 சதவீத பேட்டரி இருந்தால் பாஜகவுக்கு வாக்குகளா?
2024-ஆம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேட்டரியில் 90 சதவீதம் சார்ஜ் இருந்தால் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும், 70 சதவீதம் சார்ஜ் இருந்தால் எதிர்க்கட்சிகளுக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும் குற்றம்சாட்டினர். இதைவிட முட்டாள்தனமான குற்றச்சாட்டு இருக்க முடியுமா?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மனிதர்கள் அல்ல. அவை இயந்திரங்கள். வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் பேட்டரிகள் புதிதாகத் திறக்கப்பட்டு, இயந்திரங்களில் பொருத்தப்பட்டு சீல் வைக்கப்படுகின்றன என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. அப்படியிருக்கும்போது 90 சதவீத சார்ஜ் இருந்தால் பாஜகவுக்கும், 70 சதவீத சார்ஜ் இருந்தால் காங்கிரஸுக்கும் வாக்குகள் செல்லும் என்று எப்படிக் கூற முடியும்?
இதேபோன்ற அபத்தமான, பொய்யான குற்றச்சாட்டுகளைத்தான் இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராகவும் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.
13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகப் பொய்
வாக்காளர் பட்டியலிலிருந்து 13 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் உண்மையிலேயே நீக்கப்பட்டிருந்தால் நாடு அமைதியாக இருக்குமா? மக்கள் தெருக்களில் இறங்கிப் போராட மாட்டார்களா? இது மிகப்பெரிய பொய்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களுக்குத் தேர்தல் ஆணையம் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பதிலளித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
உண்மையான இலக்கு பிரதமர் மோடி
இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இலக்காக வைத்துப் பேசுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் தேர்தல் ஆணையம்தான் அவர்களது இலக்கு என்று தோன்றும். ஆனால் அவர்களது உண்மையான இலக்கு பிரதமர் நரேந்திர மோடிதான்.
இந்தியாவில் தேர்தல்கள் முறையாக நடைபெறுவதில்லை என்றும், மோடி பெற்ற வெற்றிகள் நியாயமானவை அல்ல என்றும் உலக நாடுகளிடம் பிரசாரம் செய்வதுதான் அவர்களது நோக்கம். அதனால்தான் ஊடகங்கள் வழியாக இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல முடிவு செய்திருக்கிறோம்.
12 ஆண்டுகளாகக் குறையாத மோடியின் செல்வாக்கு
பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட தலைவர். கடந்த 12 ஆண்டுகளாக அவரது செல்வாக்கு குறையவில்லை. நாங்கள் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறோம். ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக வருவதற்கு முன்பும் வெற்றி பெற்றோம். அவர் வந்த பிறகும் வெற்றி பெற்றிருக்கிறோம்.
2014-ஆம் ஆண்டு ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக இல்லை. அப்போது பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2019-ஆம் ஆண்டிலும் வென்றோம். 2024-ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்றோம். மக்களின் ஆதரவாலும் பாஜக தொண்டர்களின் கடுமையான உழைப்பாலும் தொடர்ந்து 3 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 2014 முதல் 2025 வரை 60 சட்டமன்றத் தேர்தல்களிலும், 3 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தோல்வியடைந்துள்ளது. மக்களின் ஆதரவைப் பெற முடியாத காங்கிரஸ், தனது தோல்விக்குத் தேர்தல் ஆணையத்தைக் குற்றம்சாட்டுகிறது. ஜனநாயகத்தில் வெல்ல முடியாததால் அராஜகத்தை விரும்புகிறார்கள். ஜனநாயக முறையில் தேர்தல்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாதவர்கள், ஜனநாயகத்திற்கு எதிரான அராஜக வழிகளை நாடுகிறார்கள்.
ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாட்டில் அமைதியின்மையையும் அராஜகத்தையும் உருவாக்க விரும்புகிறார்கள். ஜனநாயகத்தின் மூலம் அதிகாரத்திற்கு வர முடியாததால், அராஜகத்தின் மூலம் அதிகாரத்தைப் பிடிக்கலாம் என்று கனவு காண்கிறார்கள். இதுதான் அவர்களது அரசியல் திட்டம்.
கடந்த ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற சம்பவங்களை ராகுல் காந்தி மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். நேபாளத்தில் மக்கள் போராட்டம் வன்முறையாக மாறி, இறுதியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவிலும் அதுபோன்ற சூழ்நிலை உருவாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
சில வன்முறைகள் நடைபெற வேண்டும், நாட்டில் அமைதியின்மை ஏற்பட வேண்டும், அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம். காங்கிரஸ் கட்சிக்கு மக்களின் ஆதரவு இல்லாததால்தான் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறது.
வாக்குச்சீட்டு முறையிலும் காங்கிரஸுக்குத் தோல்விதான்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகக் கூறி, வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. அந்தச் சவாலை அசாம் மாநில அரசு ஏற்றுக்கொண்டது.
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி அசாம் மாநிலம் சில்சார் மாநகராட்சியில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அங்குள்ள 42 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியால் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாஜக 34 வார்டுகளில் வெற்றி பெற்றது.
அடுத்ததாக பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் 28 சட்டமேலவை இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களும் வாக்குச்சீட்டு முறையில்தான் நடத்தப்பட்டன. 28 இடங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரே ஒரு இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜக 16 இடங்களில் வெற்றி பெற்றது. இவை பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேர்தல்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். படித்த மக்கள்கூட காங்கிரஸின் பிரசாரத்தை நிராகரித்திருக்கிறார்கள்.
உங்கள் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும் கடந்த வார இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அவையும் வாக்குச்சீட்டு முறையில்தான் நடத்தப்பட்டன. அங்கேயும் காங்கிரஸால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியவில்லை. எங்கு பார்த்தாலும் பூஜ்யம், ஓர் இடம் அல்லது இரண்டு வார்டுகள் என்ற நிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. மக்களின் ஆதரவு இல்லாத கட்சி நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
13 கோடி வாக்காளர்கள் விவகாரத்தில் நடந்தது என்ன?
13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. அந்த எண்ணிக்கையில் சுமார் 6 கோடி பேர் தங்களது வசிப்பிடங்களை மாற்றியவர்கள். உதாரணமாகச் சென்னையிலிருந்து ஐதராபாத், சென்னையிலிருந்து பெங்களூரு அல்லது டெல்லியிலிருந்து வேறு நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புதிய இடங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர். மேலும் 3 கோடி பேர் உயிரிழந்தவர்கள். சுமார் 1 கோடி பேரை அவர்களது பழைய முகவரிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறப்பு தீவிர திருத்தப் பணி என்றால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பார்கள். ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் ஆய்வு செய்வார்கள். அவ்வாறு ஆய்வு செய்தபோது சிலரை அவர்களது முகவரிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்தப் பெயர்கள் நீக்கப்பட்டன. இறுதியாக சுமார் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலான பெயர்கள் சந்தேகத்திற்குரிய பட்டியலில் உள்ளன. அந்த வாக்காளர்களுக்கு மீண்டும் தங்களது ஆவணங்களையும் சான்றிதழ்களையும் சமர்ப்பித்து, வாக்குரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் 3 கோடி புதிய வாக்காளர்களின் பெயர்களையும் பட்டியலில் சேர்த்திருக்கிறது.
முஸ்லிம்களை மட்டும் நீக்குவதாகப் பிரசாரமா?
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் முஸ்லிம்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும் காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. நான் உத்தரப்பிரதேச மாநிலத்திற்குப் பொறுப்பாளராக இருக்கிறேன். அந்த மாநிலத்திலும் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது பல லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அங்கு நீக்கப்பட்ட பெயர்களில் இந்துக்களின் பெயர்களும் பெருமளவில் உள்ளன. இந்த நடவடிக்கையில் சாதியோ மதமோ பார்க்கப்படுவதில்லை. வாக்காளர் பட்டியலைச் சரியாகப் பராமரிப்பதற்காகக் காலத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைதான் இது.
SIR ஏன் அவசியம்?
வாக்காளர் பட்டியலில் சிறப்புச் சுருக்கத் திருத்தம் (Special Summary Revision) என்ற நடைமுறை ஏற்கெனவே உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடைபெறும்போது இதுபோன்ற சுருக்கத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் சுருக்கத் திருத்தத்திற்கும் தீவிர திருத்தத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.
சுருக்கத் திருத்தத்தில் அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்வதில்லை. பிறப்பு, இறப்புப் பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலைச் சரிசெய்கிறார்கள். சிறப்பு தீவிர திருத்தத்தில் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்கிறார்கள்.
இந்தியாவில் ஊடுருவல்காரர்கள் இருப்பதால் அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து அகற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதேபோல் இடம்பெயர்ந்தவர்களின் பழைய பதிவுகளையும் சரிசெய்ய வேண்டும். இது நமது தேர்தல் முறைக்கு நல்லது. ஆனால் ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவைப் பெற முடியாத காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தீய நோக்கத்துடன் பிரசாரம் செய்கிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸைப் பற்றி ஏன் பேசுகிறேன்?
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பற்றி நான் ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். 1967-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து விரட்டிவிட்டார்கள். அதன்பிறகு காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தனியாக அரசியல் நடத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. மற்ற கட்சிகளின் தயவில்தான் இங்கே பிழைத்துக்கொண்டிருக்கிறது. ஒட்டுண்ணிகளைப் போல மற்ற கட்சிகளைச் சார்ந்துதான் காங்கிரஸ் உயிர்வாழ்கிறது. அப்படிப்பட்ட கட்சியைப் பற்றி தமிழ்நாட்டில் ஏன் பேச வேண்டும் என்ற கேள்வி எழலாம். காங்கிரஸ் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரசாரம் தமிழ்நாட்டிலுள்ள சிலரையும் சென்றடையக்கூடும். அதனால்தான் அதன் உண்மையான நோக்கத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஸ்டாலினுக்குத் தெரியும்.. விஜய்க்கு எச்சரிக்கை
தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அராஜகத்தை விரும்பும் ஒரு கட்சியுடனும், பொய்களைச் சொல்லும் ஒரு கட்சியுடனும் தொடர்பு வைத்திருக்கிறீர்கள். காங்கிரஸ் வெளிப்படையாகப் பொய் சொல்கிறது. நாட்டில் அராஜகத்தை விரும்புகிறது. எல்லாவற்றையும்விட அது நம்பகத்தன்மை இல்லாத கட்சி.
காங்கிரஸின் நம்பகத்தன்மை பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கோ அரசியல்வாதிகளுக்கோ நான் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. ஸ்டாலினுக்கு சில மாதங்களுக்கு முன்பே அது தெரிந்திருக்கும். காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியை நம்புவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பார். விஜய்க்கும் அது தெரியும். இப்போது விஜய் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு இன்னும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிந்தால் உடனடியாக அங்கே சென்றுவிடுவார்கள். அவர்களுக்கென்று சொந்தமாக அரசியல் பலம் எதுவும் இல்லை. மற்ற கட்சிகளை நம்பித்தான் அவர்கள் உயிர்வாழ்கிறார்கள். எனவே விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காமராஜருக்குச் செய்ததை விஜய் நினைவில் கொள்ள வேண்டும்; காங்கிரஸ் கட்சியின் வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் காமராஜர். பழைய காங்கிரஸ் கட்சியின் மகத்தான தலைவராக அவர் விளங்கினார். காமராஜர் திட்டத்தின் மூலம் இந்திரா காந்தியை முன்னிலைப்படுத்துவதில் அவர் முக்கியமான பங்கு வகித்தார்.
ஆனால் பின்னர் இந்திரா காந்தி பிரதமராக வந்தபோது, காமராஜரையே ஓரங்கட்டினார். மூத்த தலைவர்கள் பலரும் ஓரங்கட்டப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் இயல்பு இதுதான். காமராஜருக்கே இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது என்பதை விஜய் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் அரசியல் நிலவரங்களை நீங்களும் கவனித்து வருகிறீர்கள். எங்களது மாநிலத் தலைமையும் கவனித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும்.
தீபாவளித் தினத்தன்று தமிழ்நாட்டில் என்ன நடந்தது, எத்தனை மரணங்கள் நிகழ்ந்தன என்பது குறித்தெல்லாம் எங்களது மாநிலத் தலைமை பேசும். மாநில அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு மாநிலத் தலைவர்கள் பதிலளிப்பார்கள்.
இந்திய ஜனநாயகத்தின் நற்பெயரைக் கெடுக்க முயற்சி
இந்தியத் தேர்தல் முறைக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்டு வரும் பிரசாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் எதிரான மிகப்பெரிய அவதூறு. இந்திய ஜனநாயகம் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையமும் தலைமைத் தேர்தல் ஆணையரும் சர்வதேச அளவில் மதிக்கப்படுகிறார்கள்.
அமெரிக்க அதிபர்கூட தனது நாட்டில் தேர்தல்களை நடத்த ஞானேஷ் குமார் போன்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த அளவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நற்பெயர் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் ஜனநாயகப் பிம்பத்தையும் நாட்டின் நற்பெயரையும் சீர்குலைக்க முயற்சிக்கிறது. அவர்களது ஒரே நோக்கம் நாட்டில் அராஜகத்தை உருவாக்கி எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான்.
ராகுல் காந்திக்கு வயது 57
ராகுல் காந்தியை இளவரசர் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர் இனிமேலும் இளவரசர் அல்ல. அவருக்கு ஏற்கெனவே 57 வயதாகிவிட்டது. விரைவில் மூத்த குடிமகனாகப் போகிறார். ஆனால் அதிகாரம் மட்டும் அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தொலைவில்கூட தெரியவில்லை. பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதனால்தான் ராகுல் காந்தி குறுக்குவழியைத் தேடுகிறார். ஏதாவது ஒரு புரட்சியை உருவாக்க முடியுமா, அதன் மூலம் அதிகாரத்திற்கு வர முடியுமா என்று பார்க்கிறார். ஆனால் அது நடக்காது. பாஜகவும் பிரதமர் மோடியும் இந்தியாவின் 140 கோடி மக்களுக்குச் சேவை செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். நாட்டு மக்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் எங்களுக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டில் விஜய் வெற்றி பெற்றது எப்படி?
இந்தியாவின் ஜனநாயக அமைப்பும் தேர்தல் முறையும் சரியாகச் செயல்படுகின்றன என்பதற்கு உங்கள் தமிழ்நாடே மிகச்சிறந்த உதாரணம். சில மாதங்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலை நடத்தியதும் ஞானேஷ் குமார் தலைமையிலான இதே தேர்தல் ஆணையம்தான். அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது.
ஆனால் புதிதாக உருவான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது. பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் கட்சிகளால்கூட வெற்றி பெற முடியவில்லை. இப்போது தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதற்குக் காரணம் ஞானேஷ் குமார்தான் என்று குற்றம்சாட்டினால் அது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும்? காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை என்னவென்றால், தாங்கள் வெற்றி பெற்றால் அது நேர்மையான தேர்தல்; பாஜக வெற்றி பெற்றால் அது மோசடியான தேர்தல் என்பதுதான். இதுதான் காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம். தமிழ்நாட்டு மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ராம் மாதவ் தெரிவித்தார்.









