முதல்வர் சொன்னால்தான் பேசுவேன்’ – பெண் ஆட்சியர் விவகாரம் குறித்து அமைச்சர் வன்னி அரசு தகவல்

By Pandeeswari Gurusamy

|

Published on 13 Nov 2026, 4:33 PM

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் , பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே விசிக நிற்கும். இது குறித்து விசாரித்து அறிக்கை கொடுங்கள் என முதல்வர் சொன்னால்தான் நான் அது பற்றி பேசுவேன் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்த பின், கீரனூர் ஏரியில் நடைபெற்ற பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கி வைத்த அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக ஆளுநர் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழகச் சட்டம் ஒழுங்கு குறித்து நேரில் சந்தித்து அறிக்கை தாக்கல் செய்கிறார். அந்த அறிக்கையில் ஆளுநர் என்ன கூறியுள்ளார், அவர் வெளியில் வந்து என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்துதான் நாங்கள் கருத்து கூற முடியும்” என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குச் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் இன்றுதான் இங்கு வந்துள்ளேன். இனிதான் அது குறித்து விசாரிக்க வேண்டும். முழுமையாகத் தெரிந்து கொண்டுதான் அது பற்றிப் பேச வேண்டும். குறிப்பாக, பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் மற்றும் அரசுப் பணியில் இருக்கும் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. விசிக-வைப் பொறுத்தவரை எப்பொழுதுமே பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்போம். நாங்கள் எப்போதும் நீதியின் பக்கம் நிற்பவர்கள். இந்தப் பிரச்சினையையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

இதுவரை எனக்கு இது குறித்து எந்தத் தகவலும் தெரியாது. ஒருவேளை அது குறித்துப் புகார் வந்தாலோ அல்லது தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலகத்திலிருந்து உத்தரவு வந்தாலோ, அதனை விசாரித்து அவர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அதன் பின்பு நான் இது பற்றிக் கூறுகிறேன்.

ADVERTISEMENT

பெண்கள் தொடர்பாக இது போன்ற செய்திகளைப் பரப்புவதும், அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குவதும், அச்சுறுத்திப் பீதியடையச் செய்து வேலை செய்ய விடாமல் சீர்குலைப்பதும் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று தமிழகத்திலேயே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்சியராகப் பத்மஜா செயல்பட்டு வருகிறார். அவர் ஆளுங்கட்சிக்கோ, எதிர்க்கட்சிக்கோ எந்த விதத்திலும் கட்டுப்படாமல், முழுமையாக ஆட்சி அதிகாரத்தைச் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுகிறார். சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கும் நேர்மையான ஆட்சியர் அவர்.

அவர் மீது இது போன்ற அவதூறு பரப்புவதும், அவரின் ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்குவதும் பொதுவாழ்க்கை மற்றும் ஆட்சிப் பணியில் இருக்கும் பெண்களை மேலும் செயல்பட விடாமல் முடக்கும் செயலாகும். நாங்கள் எப்போதும் பெண்கள் பக்கமும், பாதிக்கப்பட்டவர்கள் பக்கமும் நிற்கக்கூடியவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அப்படித்தான் இந்த விவகாரத்தைப் பார்க்கிறது” என்றார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel