தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay TVK Puducherry) இன்று (டிசம்பர் 9) புதுச்சேரியில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் விஜய் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அரியலூர், நாகை, திருவாரூரில் ரோடு ஷோக்கள் மூலம் மக்களை சந்தித்தார்.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி விஜய் நடத்திய ரோடு ஷோ-வில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து ரோடு ஷோக்களை விஜய் நடத்தவில்லை. அண்மையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களை தனியார் கல்லூரியின் உள் அரங்கில் சந்தித்து பேசினார் விஜய்.
இதனையடுத்து புதுச்சேரியில் இன்று பொதுக் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசுகிறார். புதுச்சேரியில் விஜய் கட்சித் தலைவராக பங்கேற்று பேசும் முதல் கூட்டம் இது. கரூர் துயரத்துக்குப் பின்னர் பொதுவெளியில் விஜய் முதல் முறையாக இன்று மக்களை சந்தித்து பேசுகிறார்.
புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் தமது பிரசார வாகனத்தில் நின்றபடியே தவெகவினரிடையே பேச உள்ளார்.
கரூர் சம்பவத்தைப் போல அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக புதுச்சேரி போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
போலீஸ் கட்டுப்பாடுகள்
- புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.
- புதுச்சேரி பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தவெகவினர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது.
- இக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பொதுக்கூட்ட மைதானம் பல்வேறு தடுப்புகளால் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்குள்ளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- விஜய் வாகனத்தை இருசக்கர மற்றும் பிற வாகனங்களில் யாரும் பின் தொடரக் கூடாது.
- அனுமதி பெறாமல் பதாகைகள், வளைவுகள் வைக்கக் கூடாது
- தனியார் கட்டிடங்கள், சாலை ஓர மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வாகனங்கள் மீது யாரும் ஏறக்கூடாது.
மேலும் விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு அருகே உள்ள தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
