‘ஈரம்’ படத்தின் வழியே தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்தவர் இயக்குனர் அறிவழகன். trailer for director Arivazhagan sabtham
‘தண்ணியில பேய் வரும்கற கான்செப்டை வச்சுகிட்டு என்னமா ஸ்கிரீன்ல தண்ணி காட்டியிருக்காரு’ என்று திரையுலக சகாக்களை பிரமிக்க வைத்தவர். அதன்பிறகு வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 என்று மூன்று திரைப்படங்கள், தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸ் என்று த்ரில்லர், ஆக்ஷன் என வேறு திசையில் நகர்ந்தவர், இப்போது மீண்டும் ‘ஹாரர்’ வகைமை பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.
அவர் இயக்கிய ‘சப்தம்’ பட ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது.
‘ஈரம்’ படத்தில் எப்படி தண்ணீரைக் கொண்டு ‘ஹாரர்’ அனுபவம் தந்தாரோ, அந்த வகையில் இதில் ‘சப்தம்’ கொண்டு பயமுறுத்த முயற்சித்திருக்கிறார் அறிவழகன். ட்ரெய்லரை காண்கையில் அதனை நன்கு உணர முடிகிறது.
’பேய்ப்படம்னாலே முதல்ல பயமுறுத்தறது அதுல வர்ற சவுண்ட் தான்; இதுல சவுண்ட் தான் பேய்க்கான வெஹிக்கிளா’ என்று நீங்கள் அலறுவது புரிகிறது.
வெளியில் இருக்கும் சத்தங்களை, பதிவாகும் ஒலிகளில் இருக்கிற நுண்ணிய வேறுபாடுகளை ஆராய்ந்து பார்க்கிற நாயகன், பேய் குறித்த தனது ஆராய்ச்சிக்கு அந்த நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். ஒரு மலைப்பாங்கான பிரதேசத்திற்குச் செல்கையில், அங்கு ஒலிக்கும் வினோத சத்தங்கள் அவரைத் துணுக்குற வைக்கிறது.
மனிதர்களின் காதுகளுக்குக் கேட்காத அலைவரிசையில் ஒலிக்கிற அந்த ‘சப்தம்’ சிலரது மரணத்திற்குக் காரணமாகிறது. அதன் பின்னிருக்கும் ‘அமானுஷ்ய சக்தி’ எப்படிப்பட்டது என்பதை நாயகன் கண்டறிந்தாரா என்று கதை சொல்கிறது ‘சப்தம்’ ட்ரெய்லர்.
படம் இப்படித்தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. என்றாலும், இதனைச் சார்ந்து சில காட்சிகள் படத்தில் இருக்கும் என்று சொல்ல முடியும். அதற்கான உறுதியைத் தருகிறது ‘சப்தம்’ ட்ரெய்லர்.
இப்படத்தில் ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜிவ் மேனன், விவேக் பிரசன்னா உட்படப் பலர் நடித்துள்ளனர். தமன் இதற்கு இசையமைத்திருக்கிறார். அவரது பின்னணி இசை மிரட்டலான அனுபவத்தை தியேட்டரில் தரும் என்று நம்பலாம்.
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு, சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு, ஸ்டன்னர் சாமின் சண்டைக்காட்சி வடிவமைப்பு என்று இதில் தொழில்நுட்ப அம்சங்களும் செறிவுற அமைந்திருப்பதாக நம்பலாம்.
அறிவழகன் இயக்கத்தில் ‘பார்டர்’ திரைப்படம் வெளியாவது தாமதமாகி வரும் நிலையில், வரும் 28ஆம் தேதியன்று ‘சப்தம்’ தியேட்டர்களில் வெளியாகிறது. முழுமையாக நிறைவடைந்து சுமார் ஓராண்டு காலம் கழித்து வெளியானாலும், நிச்சயம் வித்தியாசமான திரையனுபவத்தைத் தரும் என்கிறது ட்ரெய்லர்.
படமும் அவ்வாறு அமைந்தால் மகிழ்ச்சி தான்.