சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது லோடு டெம்போ மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். ஆடி மாதம் பிறந்திருக்கும் நிலையில் சமயபுரம் கோயிலுக்கு அதிகம் பேர் வந்து செல்வர்.
அந்தகவகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு குழு மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கன்னுக்குடிபட்டியை சேர்ந்த முத்துச்சாமி, மீனா, ராணி, சங்கீதா, லட்சுமி மோகனாம்பாள் உள்ளிட்டோர் சமயபுரத்துக்கு சென்று வழிபட இருந்தனர்.
இவர்கள் இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாத யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு டெம்போ இவர்கள் மீது மோதியதால் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் மீனா, ராணி, மோகனாம்பாள், முத்துசாமி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சங்கீதா, லட்சுமி ஆகியோர் படுகாயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக அதிகரித்தது.
இந்த லோடு டெம்போ கரூரில் இருந்து தஞ்சை வந்து அரிசி மூட்டைகளை இறக்கிவிட்டு மீண்டும் கரூருக்கு திரும்பும் போது இவ்விபத்து ஏற்பட்டிருக்கிறது.
லோடு டெம்போவை வளம்பக்குடியைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்ததாகவும், அதிகாலை நேரத்தில் அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ பக்தர்கள் மீது மோதியிருக்கிறது.
இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சொதப்பிய ‘இந்தியன் 2’: ஷங்கருக்கு கைகொடுக்குமா ‘கேம் சேஞ்சர்ஸ்’?