‘குடும்பத்தை கொன்று விடுவோம் என மிரட்டினார்’ துணை சபா நாயகர் ரவிசங்கர் மீது பகீர் குற்றச்சாட்டு

By Pandeeswari Gurusamy

|

Published on 9 Nov 2026, 3:00 PM

துறையூரில் குடிநீர் சரியாக வரவில்லை என மனு அளிக்கச் சென்ற கார்த்திக் குமார் தனக்கும், தனது குடும்பத்திற்கும் துணை சபாநாயகர் ரவிசங்கர் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து கார்த்திக்குமார் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில், எனது வார்டில் அடிப்படை வசதி கோரி நகராட்சியில் பல தடவை மனு கொடுத்தேன்; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறையூர் சட்டமன்ற அலுவலகத்திற்குச் சென்றும் மனு கொடுத்தேன்; அங்கும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ADVERTISEMENT

நேற்று எதார்த்தமாக சமயபுரம் கோவிலுக்குச் சென்றபோது துணை சபாநாயகரின் வீட்டின் முன் வண்டி நின்றது. அவரைப் பார்த்து அவரிடம் கோரிக்கை தெரிவிக்கச் சென்றேன். அப்போது அங்கிருந்து இறங்கி வந்து எந்த விசாரணையும் இன்றி என்னை கைநீட்டி அடித்து, மிகவும் அசிங்கமாகவும் தரக்குறைவாகவும் பேசி என் கண்ணாடி, வண்டி சாவி எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர்.

நான் மிகவும் இருட்டிய நேரத்தில் எல்லாம் போகவில்லை; மாலை ஆறரை மணிக்குத் தான் போனேன். துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் என்னை அடித்தார். என் செருப்பு, கண்ணாடி எல்லாவற்றையும் கழற்றி எறிந்ததில், நான் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியையும் காணவில்லை.

ADVERTISEMENT

அதன் பின் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று OP சீட்டு பெற்றேன். OPயில் புகார் கொடுத்தேன். அங்கு பணியில் இருந்த மருத்துவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் வந்து யார் அடித்தது என்று கேட்டார். நான் “துணை சபாநாயகர், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் என்னை அடித்தார்” என்று பதிவு செய்தேன். ஆனால், அங்கு அடையாளம் தெரியாத நபர் அடித்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இது நடந்து கொண்டிருக்கும்போதே மணச்சநல்லூர் ஆய்வாளர் கிருபாநிதி வந்து என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். காவல் நிலையத்தில் வைத்து நான் யாரையோ அடித்தது போல் புகார் வந்திருப்பதாகக் கூறி, “உன்னை நான் ரிமாண்ட் செய்கிறேன்” என்று மிரட்டினார்.

ADVERTISEMENT

பிறகு என்னை வலுக்கட்டாயமாக துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து மிரட்டினார்கள். “நாங்கள் சொல்வது போல் பேசவில்லை என்றால் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம்; நான் சொன்னால் புஸ்ஸி ஆனந்த் என்ன வேண்டுமானாலும் செய்வார்” என்று மிரட்டினார்.

இதையடுத்து துணை சபாநாயகருடன் என்னை அமர வைத்து, அவர்கள் சொல்வது போல் பேச வைத்து 6, 7 டேக் வீடியோ எடுத்தார்கள்.

அந்த இடத்தில் தர்மசங்கடத்தில் இருந்த என்னை வலுக்கட்டாயமாகப் பேச வைத்து வீடியோ எடுத்துக்கொண்டார்கள்; நான் விருப்பப்பட்டு அதைக் கொடுக்கவில்லை. என் உயிருக்கு பயந்தும், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசினேன். என் மனதார நான் அந்த வீடியோவைக் கொடுக்கவில்லை.

சமூக வலைதளங்களில் என்னை அவதூறாகப் பேசுகிறார்கள்; நான் பணம் வாங்கும் ஆள் இல்லை.” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “தொகுதியில் நிலவும் பிரச்னையை பற்றி கூற வந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்- இது மக்கள் ஆட்சி அல்ல தற்குறிகளின் ஆட்சி தான் என அடித்து நிரூபித்துள்ளார் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான திரு.ரவிசங்கர் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.

விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை ரவி சங்கர் கண்மூடித்தனமாக தாக்கியிருப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை விஜய் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது.

மக்களோடு மக்களாக நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?

எனவே, தொகுதி பிரச்னையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel