மெரினாவில் நடந்த உயிரிழப்புகளுக்கு உயர் மட்ட விசாரணை வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சியான விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியின் போது வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
“இந்த உயிரிழப்புகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு. இத்தனை லட்சம் பேர் கூடுவார்கள் என்கிற போது போதிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் மெரினாவில் நடந்த சோக நிகழ்வு குறித்து இன்று (அக்டோபர் 7) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த விஷயத்தில் அரசியல் செய்யாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்தசூழலில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று சமூக வலைதள பக்கம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் இது நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் – மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை இந்த சாகச நிகழ்வை நடத்தியுள்ளது.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டன. இது தொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொது மக்களை வெகுவாக ஈர்த்ததால் லட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர்.
இந்நிலையில் தான், ஐந்து பேர் பலியாகும் அவலம் நடந்துள்ளது. இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் (stampede) ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன எனத் தெரியவருகிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும்,
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில், “இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது.
அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது.
எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும்.
அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எளச்ச யானையும் இல்லை… குண்டான குதிரையும் இல்லை… உருவக் கேலியால் வீழ்த்தி விட முடியாது- ரவீந்தர்
காதலை முதலில் சொன்னது யார்? – அஜித் ஷாலினி பற்றி வெளி வந்த ரகசியம்!