”பெரியார் அறிவுலகம்” புத்தக கொள்முதல் ஊழல்- விசாரணை ஆணையம் அமைக்க திருமாவளவன் கோரிக்கை!

By Mathi

|

Published on 7 Nov 2026, 1:51 AM

Periyar Arivulagam-Thirumavalavan

கோவையில் உள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்ட அறிக்கை: கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற ‘பெரியார் அறிவுலகம்’ என்னும் நூலகத்தில் இடம் பெற்று பல நூல்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மனம் நொந்து பதிவிட்டுள்ளார். சான்றுக்கு சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது மிகுந்த பேரதிர்ச்சியை அளிக்கிறது.

ADVERTISEMENT

போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என ஊகிக்கும் அதே வேளையில்; வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய -இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிகமோசமான மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் ஆகும். இது தீராத ஆத்திரத்தையும் பெருங்கவலையையும் அளிக்கிறது.

இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளித்திட அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசுக்கான பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ள நூல்களின் உள்ளீட்டுக்கான தரம் எத்தகையது என்பதைக் கண்டறியவும்; போலி நிறுவனங்களின் மூலம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளைக் கண்டறிந்து தொடர்புடையோரைத் தண்டிக்கவும் ஏதுவாக தமிழ்நாடு அரசு உடனடியாக ‘விசாரணை ஆணையம்’ ஒன்றை அமைத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel