நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு நுழைவுச்சீட்டுடன் வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அரங்கத்துக்குள் செல்ல முடியாமல் திரும்பிய சம்பவத்துக்கு தனுஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் தனுஷின் ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 6) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். தனுஷை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் நுழைவுச்சீட்டுகளுடன் வந்த ரசிகர்கள் பலரும் அரங்கத்துக்குள் செல்ல முயன்றனர்.
ஆனால் விழா அரங்கம் முழுவதும் நிரம்பியதால், நுழைவுச்சீட்டு வைத்திருந்த ரசிகர்களைக்கூட போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க முடியாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு”
என்று தெரிவித்துள்ளார்.










