மத்திய- மாநில உறவுகள் குறித்து ஆராய ஸ்டாலின் அமைத்த குரியன் ஜோசப் கமிட்டி கலைப்பு!

By Mathi

|

Published on 7 Nov 2026, 2:22 AM

Kurian Joseph Committee

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவை தமிழ்நாடு அரசு கலைத்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேசிய அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

ADVERTISEMENT

அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள், மத்திய – மாநில உறவுகள் தொடர்பான சட்டங்கள், அரசின் கொள்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சியையும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவது இந்தக் குழுவின் பணியாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, மாநிலத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த உயர்நிலைக் குழு தனது ஆய்வறிக்கையின் முதல் பகுதியை கடந்த பிப்ரவரி 16-ந் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநில சுயாட்சி தொடர்பான உயர்நிலைக் குழுவைக் கலைத்து உத்தரவிட்டுள்ளதாக தி இந்து நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ”குரியன் ஜோசப் குழுவை கலைப்பதற்கான அரசாணை நவம்பர் 6-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் ஆகஸ்ட் 7-ந் தேதி மறுசீரமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள், மத்திய – மாநில உறவுகள், நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்தல், மாநிலத்தின் சட்ட மற்றும் நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மத்திய – மாநில உறவுகள் தொடர்பான உயர்நிலைக் குழு சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல (Non-statutory body) என்றும், அந்தக் குழுவின் பணிகளுக்கும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் இடையே பெருமளவில் ஒற்றுமையும் ஒரே மாதிரியான பொறுப்புகளும் இருப்பதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அனைத்தையும் கவனமாகப் பரிசீலித்த பின்னர், மத்திய – மாநில உறவுகள் தொடர்பான உயர்நிலைக் குழுவின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 15-ந் தேதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக ஸ்டாலின் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த Dummy அரசு உருவாக்கி இருக்கிறது.

மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது.

Reels போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel