அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது நோபல் பரிசு பதக்கத்தை வழங்கியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க ராணுவம் வெனிசுலா தலைநகர் கராகஸில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி (2026) தாக்குதல் நடத்தி, அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸையும் கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. போதைப்பொருள் கடத்தல், நார்கோ-டெரரிசம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 2020-இல் பதிவான வழக்கில் இவர்கள் தற்போது நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கையை அறிவித்து, “நிலைமை சீரடையும் வரை அமெரிக்கா வெனிசுலாவை நிர்வகிக்கும்” என்று தெரிவித்தார். மதுரோ கைது செய்யப்பட்ட பிறகு, அவரது துணை அதிபர் டெல்சி ரோட்ரிகெஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் தன்னை வெனிசுலாவின் அதிபர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை குறி வைத்தே அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்றும், இறையாண்மைக்கு எதிரானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வெனிசுலாவில் தற்போது பதற்றம் நீடித்து வருகிறது; பாதுகாப்புப் படைகள் கடும் கண்காணிப்பில் உள்ளன.
டிரம்பிடம் நோபல் பரிசு
ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் போர்களைத் தடுத்ததாகக் கூறி, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று டிரம்ப் பலமுறை தனது விருப்பத்தை வெளிப்படையாக பேசி இருந்தார்.
இதற்கிடையே, 2025 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ ஜனவரி 15, 2026 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்தித்தார். தனது நோபல் பதக்கத்தை டிரம்பிடம் வழங்கி, வெனிசுலா சுதந்திரத்திற்கான அவரது அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து டிரம்ப் , “நான் செய்த பணிக்காக மரியா இந்த நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா” என்று குறிப்பிட்டுள்ளார்.
நோபல் குழு விளக்கம்
இது தொடர்பாக நோபல் குழு வெளியிட்ட விளக்கத்தில், “நோபல் பரிசை ரத்து செய்யவோ, பகிரவோ அல்லது மற்றவர்களுக்குத் தரவோ முடியாது. ஒருமுறை அறிவிக்கப்பட்டால் அது நிரந்தரமானது” என்று தெளிவுபடுத்தியுள்ளது.எனவே, மச்சாடோ டிரம்புக்கு பதக்கத்தை வழங்கியிருந்தாலும், அதிகாரப்பூர்வமாக அது ஏற்றுக்கொள்ளப்படாது. 2025 அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக மச்சாடோவே தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
