சொந்த பிள்ளைகளால் முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்தநாள் என எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட 50வது வருடத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.
எமெர்ஜென்சி வரலாறு
1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரேதேசத்திலுள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி தேர்தலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்ததாக, அவரை எதிர்த்து போட்டியிட்ட சோசலிஸ்ட் தலைவர் ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கின் முடிவில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட முடியாது என்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார்.
இதனால், நாடு முழுவதும் பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் தொடங்கின. ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று திரண்டனர்.
நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இரவு நாடு முழுவதும் அவசர நிலையை அப்போதைய குடியரசுத் தலைவரான பக்ருதீன் அலி அகமது அறிவித்தார்.
இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.
பிரதமர் பேச்சு
இந்த நிலையில் ”இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு 50 வருடங்கள் ஆகிறது. இது ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை” என பிரதமர் மோடி நேற்று (ஜூன் 24) விமர்சித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்த நாள் இந்திய ஜனநாயகத்தின் விழுந்த கறையின் 50 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்தியாவில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட 50வது வருடம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக நிராகரித்தது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.
ஜனநாயகம் முற்றிலும் நசுக்கப்பட்டது. அரசியலமைப்பை பாதுகாக்க நினைக்கும் இந்தியாவின் புதிய தலைமுறை இந்த நாளை ஒருபோதும் மறக்காது. 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இதுபோன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்யத் துணிய மாட்டார்கள்” என மோடி கூறியிருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு
இந்நிலையில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது.
ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி, புத்தகங்கள், உடைகளை கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்?
சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம்” என ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”கலைஞரின் பிறந்தநாள் இனி செம்மொழி நாள்” : அமைச்சர் அறிவிப்பு!
T20WorldCup : ஆஸ்திரேலியாவை பழிதீர்த்து அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!