IND vs AUS: 2024 டி20 உலகக்கோப்பையின் ‘சூப்பர் 8’ பிரிவில், விளையாடிய 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா, தனது 3வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜூன் 24) இரவு நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, ஒருமுனையில் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
ஆனால், மறுமுனையில் களமிறங்கிய ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை பஞ்சாய் பறக்கவிட்டார்.
மிட்சல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 4 சிக்ஸ்களுடன் 28 ரன்கள் குவித்த ரோகித் சர்மா, 19 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
தனது அதிரடியை தொடர்ந்த ரோகித் சர்மா, 8 சிக்ஸ், 7 ஃபோர்களுடன் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தபோது, மிட்சல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின் அடுத்தடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (31 ரன்கள்), சிவம் துபே (28 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (27 ரன்கள்) சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணிக்காக மிட்சல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து, 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ், அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, பவர்-பிளே முடிவில் அந்த அணி 65 ரன்கள் சேர்த்தது.
மிட்சல் மார்ஷ் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில், டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம், 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியாவுக்காக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தனது அபாரமான ஆட்டத்திற்காக, ரோகித் சர்மா இப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அந்த ஆட்டம் கயானாவில் உள்ள ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் ஜூன் 27 மாலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: இருக்கையை விட்டு அகலாமல் வேலை பார்ப்பவரா நீங்கள்?
பியூட்டி டிப்ஸ்: லிப்ஸ்டிக்கே பயன்படுத்தாதவர்களின் வாயைச் சுற்றி அலர்ஜி… காரணம் என்ன?
டாப் 10 நியூஸ் : அதிமுக – ஆளுநர் சந்திப்பு முதல் இந்தியன் 2 டிரைலர் ரிலீஸ் வரை!