மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 50 சதவிதமாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மத்திய அரசை இன்று (பிப்ரவரி 28) வலியுறுத்தியுள்ளனர். Thangam thennarasu Ramadoss urges
தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “தமிழ்நாடு ஏற்கனவே வரிப்பகிர்வை தகுதியானதை விட குறைவாகவே பெறுகிறது. இப்போது நிதிக் குழு, மத்திய அரசு பரிந்துரைத்தபடி மாநிலங்களின் பங்கை 41 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக குறைக்க பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு இதுதான் வெகுமதியா? மத்திய அரசு நியாயமாக செயல்பட வேண்டும். மாநிலங்களுக்கு 50 சதவிதம் நிதிப்பகிர்வு அளிக்க வேண்டும். பல மாநிலங்களும் இதை வலியுறுத்தியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் தனது பதிவில், “மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 40 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று நிதி ஆணையத்தைக் கேட்டுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசின் முடிவால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு ரூ.35,000 கோடிக்கும் அதிகமாக குறையக்கூடும்.

மாநிலங்களின் நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், அதன்பின் மத்திய அரசின் முடிவு அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-ஆம் நிதி ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு போதுமானதல்ல என்று கூறப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். மத்திய அரசுக்கு மிக அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஆனால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு மிகவும் குறைவாகும்.
எடுத்துக்காட்டாக, மத்திய அரசுக்கு வரிகள் மூலம் ரூ.100 வருமானம் கிடைத்தால், அதில் இதுவரை 41 ரூபாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் 41 ரூபாயில் தமிழகத்திற்கு வெறும் 4.09 சதவிகிதம் மட்டுமே, அதாவது ரூ.1.64 மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசின் வரி வருவாய்க்கு தமிழ்நாடு ரூ.7 முதல் 8 வரை பங்களிக்கும் நிலையில், அதில் நான்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது.
வரி வருவாய் பகிர்வில் மாநிலங்களின் பங்கு 40 சதவிகிதமாக குறைக்கப்பட்டால், இப்போது தமிழகத்திற்கு கிடைத்து வரும் ரூ.1.64 இனி ரூ.1.60 ஆக குறைந்து விடும். இது தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு மாநில அரசுகளும் வலியுறுத்தி வரும் நிலையில் அதை 40 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு முயல்வது நியாயமல்ல. மத்திய அரசுக்கான வருமானம் முழுவதும் மாநிலங்களில் இருந்து தான் கிடைக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை குறைக்கக் கூடாது.
எனவே, வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கான பங்கை 40 சதவிகிதமாக குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அத்தகைய பரிந்துரையை அளித்தாலும் அதை நிதி ஆணையம் ஏற்கக் கூடாது. மாறாக, மாநிலங்களுக்கான பங்கை 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும். Thangam thennarasu Ramadoss urges
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.