திரைக்கதையில் இத்தனை வேகம் விவேகமல்ல..! Ten Hours Movie Review
ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜோர், வெற்றிவேல் சக்திவேல், லீ, நாணயம் போன்ற வித்தியாசமான கதைகளில் தோன்றியவர் நடிகர் சிபிராஜ்.
ஆனாலும், ‘சத்யராஜின் வாரிசு’ என்கிற அடையாளம் அப்படங்களின் சிறப்புகளைப் புறந்தள்ளியது. பெருவெற்றி ஒன்றைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியது. அவர் நடித்த நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, சத்யா, கபடதாரி போன்ற படங்கள் வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தைத் தந்தபோதும் அந்த இலக்கை அடைய உதவவில்லை. அதனாலேயே, சுமார் 22 ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்துவந்தாலும் சிபிராஜுக்கான இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது. Ten Hours Movie Review

அப்படியொரு சூழலில், தற்போதைய ‘த்ரில்லர்’ ட்ரெண்டுக்கு ஏற்ப நிறையவே ‘ஹீரோயிசம்’ வெளிப்படுகிற ஒரு திரைக்கதையில் சிபிராஜ் இடம்பெற்றால் எப்படியிருக்கும்? அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘டென் ஹவர்ஸ்’ பட ட்ரெய்லர். அது மட்டுமல்லாமல், பத்து மணி நேரத்தில் நிகழ்கிற போலீஸ் விசாரணை என்பதும் ஈர்ப்பை உருவாக்கியது.
இளையராஜா கலியபெருமாள் இயக்கியிருக்கிற இப்படத்தில் சிபிராஜ் உடன் கஜராஜ் திலீபன், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, சுஜாதா பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘டென் ஹவர்ஸ்’ எப்படி இருக்கிறது? Ten Hours Movie Review
வெவ்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே..! Ten Hours Movie Review
இளமையைக் கடந்து நடுத்தர வயது நோக்கி நடைபோடுகிற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறதா என்று தெரியவில்லை (திரைக்கதையில்). சபரிமலை யாத்திரைக்குப் தயாராகிவரும் அவர், அதற்கு முந்தைய நாள் சில புகார்களை விசாரிக்க வேண்டிய சூழலை எதிர்கொள்கிறார்.
முதலில் ஒரு இளம்பெண் காணாமல் போனதை விசாரிக்க வேண்டியிருக்கிறது.
அடுத்ததாக, சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஒரு ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணைச் சிலர் துன்புறுத்துவதாக, காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் சொல்லப்படுகிறது. Ten Hours Movie Review

முதல் பிரச்சனையை விசாரிக்கும்போதே, அப்பெண் கடத்தப்பட்டது உறுதியாகத் தெரிய வருகிறது. அதன் பின்னிருப்பவர்களைத் தேடி அந்த ஒரு குழுவை அனுப்பி வைக்கிறார் இன்ஸ்பெக்டர். Ten Hours Movie Review
இரண்டாவது பிரச்சனையை விசாரிக்கச் சென்றால், கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சொன்ன நபர் பேருந்துக்குள் கொலையாகிக் கிடப்பது தெரிய வருகிறது.
ஓடும் பேருந்தில் கொலை நிகழ்ந்திருப்பதால், அதிலிருக்கும் ஒருவரே கொலையாளி என்று உறுதியாக நம்புகிறார் இன்ஸ்பெக்டர். ஆனால், விசாரணையின்போது கிடைக்கிற தகவல்கள் அதன் பின்னிருப்பவர் யாரென்று தெரியவிடாமல் அவரைச் சுற்றலில் விடுகின்றன. Ten Hours Movie Review
யார் அவர் என்று கண்டறிகிற இன்ஸ்பெக்டரின் முயற்சிகள் தோல்வியுறுகின்றன.
இதற்கு நடுவே, நெடுஞ்சாலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடைக்கிறது. ஆனால், அது காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட பெண் அல்ல. கொலை நிகழ்ந்த பேருந்தில் ஏறியிருக்க வேண்டிய பெண் அவர். Ten Hours Movie Review
சென்னையில் இருந்து கிளம்பிய பேருந்தில் அப்பெண் ஏறாதபோதும், சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்படுகிறார். அவ்வளவு தூரம் அவர் எப்படி, எதில் பயணித்து வந்திருப்பார்?

இந்தக் கதையில் வருகிற மூன்று பிரச்சனைகளுக்கும் இன்ஸ்பெக்டர் கண்டறிந்த தீர்வுகளைச் சொல்வதோடு படம் முடிவடைகிறது.
இந்தக் கதையில் மேற்சொன்ன மூன்று பிரச்சனைகளும் ஒரு இழையில் பிணைக்கப்பட்டிருப்பது தெரிய வரும் இடமே ‘ஹைலைட்’.
அந்த பிரச்சனைகள் ஒரு புள்ளியில் சம்பந்தப்பட்டிருப்பதை இன்ஸ்பெக்டர் பாத்திரம் குறிப்பிட்ட கட்டத்திலேயே உணர வேண்டும். திரைக்கதையின் முதல் முடிச்சு மற்றும் அதனால் விளையும் நிகழ்வுகளைத் தாண்டி தீர்வை நோக்கித் திருப்புகிற இடமாக அதுவே இருந்திருக்கும். Ten Hours Movie Review
ஆனால், அப்படியொரு முடிவுக்கு முதலிலேயே நாயகன் வந்துவிடுவதாகக் காட்டியிருக்கிறது ‘டென் ஹவர்ஸ்’. அதுவே இப்படத்தின் பெரும் பலவீனம்.
கதையை விவாதித்திருக்கலாம்..! Ten Hours Movie Review
இயக்குனர் இளையராஜா கலியபெருமாளின் எழுத்தாக்கம், நல்லதொரு ‘த்ரில்லர்’ கதையைப் பரபரப்பாகத் திரையில் சொல்லி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறது. அதில் தவறில்லை.
ஆனால், சிறு குழந்தைகளும் கேட்டுவிடுகிற சந்தேகங்களைக் கூட ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்வது போன்று சில கேள்விகளுக்குப் பதில் சொல்லாமலேயே கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார். கொஞ்சமாகக் கதையை விவாதித்திருந்தால் அல்லது விவாதத்தின்போது அவற்றைக் குறிப்பிட்டுத் தீர்வுகளைத் தருகிறவர்களை உடன் வைத்திருந்தால் இந்த நிலைமை அறவே ஏற்பட்டிருக்காது.
வெவ்வேறு நிலப்பகுதிகளில் நகர்கிற சம்பவங்களைக் கொண்ட ஒரு கதையில், போலீஸ் விசாரணை சில மணி நேரங்களில் சட்டென்று நடந்து முடிவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அவற்றைக் காட்சிகளில் முன்வைக்கவே இல்லை.

மாறாக, காட்சிகள் வேகமாக நகர்வது போன்று ஒளிப்பதிவையும் படத்தொகுப்பையும் பின்னணி இசையையும் கையாள்கிற ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’ இருந்தால் போதும் என்று எண்ணியிருக்கிறார்.
அவற்றைச் சரியாக ஒருங்கிணைத்து ஒரு காட்சியை ‘மிக வேகமானதாக’ பார்வையாளர்களை உணரச் செய்ய முடியும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அப்படி நகர்கிற காட்சிகளுக்குடையே பிணைப்பு இழை வலுவாக இருக்க வேண்டும். லாஜிக் சார்ந்த கேள்விகளுக்கு இடமே அளிக்கக் கூடாது. அப்படிப்பட்ட ‘காட்சிக்கோர்வை’களின் முடிவில் ஒரு பெருங்குற்றம் இருப்பது கதையில் வெளிப்பட வேண்டும். ‘டென் ஹவர்ஸ்’ படத்தில் அது நிகழவில்லை.
குறிப்பாக, பரபரப்பாக நகர்கிற கதையைத் திரையில் சொல்லும்போது ‘மிக மெதுவாக’ நகர்வது போன்ற திரைக்கதை ட்ரீட்மெண்டை கையாண்டிருக்க வேண்டும். அந்த உத்தியானது கதாபாத்திரங்களுடன், கதையில் வருகிற நிகழ்வுகளுடன் பார்வையாளர்களை ஒன்றச் செய்திருக்கும்.
அப்படி நடந்திருக்கும் பட்சத்தில், திருப்புமுனை காட்சிகளின்போது தானாகவே பார்வையாளர்கள் தங்கள் மனதில் வேகத்தை உணர்ந்திருப்பார்கள். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் வழியே அந்த வேகத்தைப் பின்பாதியில் பன்மடங்காக்கி இருக்கவும் முடியும். இப்படத்தில் அது ‘மிஸ்’ ஆகியிருக்கிறது.
இயக்குனர் இளையராஜா கலியபெருமாளின் கதை சொல்லல் அணுகுமுறையில் நேரிட்ட தவறினால், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் அவருக்கு உதவிய ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக், படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குனர் அருண் சங்கர் துரை, பின்னணி இசை தந்த கே.எஸ்.சுந்தரமூர்த்தி, சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் சக்தி சரவணன் உள்ளிட்ட குழுவினரைக் குறை சொல்ல வழி இல்லாமல் போயிருக்கிறது.
’காவல் துறையின் அதிகார அத்துமீறல்களை ஏற்க வேண்டுமா’ என்ற கேள்வி வலுவாக எழுப்பப்படுகிற இந்நாட்களில், ’போலீஸ் விசாரணையில் எத்தகைய அடக்குமுறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே’ என்கிற அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது சிபிராஜ் பாத்திரம்.

அது நம்மை ஈர்க்காத காரணத்தால், அதன் செயல்பாடுகள் விசித்திரமாகத் தெரிகின்றன. அதுவும் விசாரணை என்ற பெயரில் அடி பின்னியெடுத்தபிறகு ‘சாமி சரணம்’ என்றவாறே அப்பாத்திரம் திருநீறை அள்ளிப் பூசும்போது ‘இது என்ன வகை ஹீரோயிசம்’ என்ற கேள்வியே எழுகிறது.
அது மட்டுமல்லாமல், இப்படத்தில் வருகிற பல பாத்திரங்கள் திரையில் அறிமுகப்படுத்துகிற சில நிமிடங்களில் கதையில் இருந்து பின்வாங்குகின்றன.
அந்த பாத்திரங்களில் கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, தங்கதுரை, ஆடுகளம் முருகதாஸ், சுஜாதா பாபு, திலீபன், சரவண சுப்பையா உள்ளிட்ட சிலர் தோன்றியிருக்கின்றனர். அது போக சில டஜன் கலைஞர்கள் இதிலுண்டு.
கொலை முதலான குற்றங்களை மையப்படுத்துகிற ஒரு ‘த்ரில்லர்’ கதையைத் திரையில் பரபரப்பாக நகர்கிற காட்சிகளாக அடுக்குகிறபோது ரசிகர்கள் படத்தோடு ஒன்றிவிடுவார்கள் என்று நம்பியிருக்கிறார் இயக்குனர். படக்குழுவும் அதற்கேற்ப பணியாற்றியிருக்கிறது. ஆனால், அதீத வேகம் விவேகமல்ல என்பதை மறந்திருக்கிறது.
விளைவு, திரையில் படம் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்திசையில் நமது மனம் எதிர்பார்ப்புகளைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. படம் முடிகிறபோது, இரண்டுக்குமான தொலைவைக் கடக்கப் பல மணி நேரங்கள் ஆகும் என்பது மட்டும் பிடிபடுகிறது. அதற்கு ‘டென் ஹவர்ஸ்’ எல்லாம் பத்தாது!
