மேற்கு வங்கத்தின் தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற ‘பஸ்ச்சிம்பங்க சத்ரொ சமாஜ்’ என்கிற மாணவர் அமைப்பின் மீது காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகைகுண்டுகள் வீசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் படித்து வந்த பயிற்சி மாணவி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்குப் பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று ‘பஸ்ச்சிம்பங்க சத்ரொ சமாஜ்’ என்ற மாணவர் சங்கம் கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் நபண்ணா கட்டடத்தை நோக்கி “நபண்ணா அபியான்” என்ற பேரணியை இன்று(ஆகஸ்ட் 27) மதியம் 2 மணிக்குத் தொடங்க உள்ளதாக நேற்று அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு கொல்கத்தா காவல்துறை அனுமதி தரவில்லை.
காவல்துறை அனுமதியை மீறி இன்று கொல்கத்தா ஹவுரா பாலத்திலும், கல்லூரி சதுக்கம் என்ற இடத்திலும் “நபண்ணா அபியான்” பேரணியில் கலந்துக்கொள்ள காலை முதல் மாணவர்கள் கூட ஆரம்பித்தனர்.
இந்த மாணவர் பேரணியை தடுக்க கொல்கத்தா காவல்துறை அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தது. கோபம் அடைந்த மாணவர்கள், காவலர்கள் மீது கற்களை வீசினர். மேலும், அவர்களை தடுக்க போடப்பட்டிருந்த ‘பாரிகேட்’களையும் உடைத்தனர்.
இதற்கிடையில், மேற்கு வங்கத்தின் இளநிலை மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக கொல்கத்தா காவல்துறை விசாரித்து வந்த இந்த கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சரியான முன்னேற்றம் இல்லாததால் , சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடந்த முதல் நாள் விசாரணையின் போது, நாடு முழுக்க உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘தேசிய பணிக்குழு’ ஒன்றை அமைத்தது.
இரண்டாம் நாள் விசாரணையில், கொல்கத்தா காவல் துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்தது. பின்னர் அமைதி வழியில் போராடும் மாணவர்களை மேற்கு வங்க அரசு ஒடுக்கக்கூடாது என்று சொல்லி வழக்கை செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்தநிலையில் தான் இன்று இந்த மாணவர் பேரணியைத் தடுக்க எல்லாவித நடவடிக்கையும் எடுத்து வருகிறது. மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்ற இந்த மாணவர் அமைப்பின் கோரிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ : ரிலீஸ் எப்போ தெரியுமா?