இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடும் விலை உயர்வினால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஆங்காங்கே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தீர்ந்து போயுள்ள நிலையில், பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொழும்பில் இருந்து வடக்கே 365 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விசுவமடுவில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இலங்கை ராணுவம் பொது மக்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு கும்பல் நேற்று இரவு ஒரு ராணுவ டிரக் மீது கற்களை வீசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. இதனால் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இராணுவப் பேச்சாளர் நிலந்த பிரேமரத்ன கூறுகையில், “கொழும்பில் இருந்து 365 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விசுவமடுவில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் தீர்ந்து விட்டதால் மக்கள் கோபம் அடைந்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த ஒரு ராணுவ டாக்டர் மீது 20 முதல் 30 பேர் கொண்ட ஒரு குழு கற்களை வீசி கோபத்தை வெளிப்படுத்தினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பொதுமக்கள் மற்றும் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.