திமுக கூட்டணியில் ‘ஆட்சியில் பங்கு’ கேட்போம் என்ற காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு தமிழக
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவு தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழு அண்மையில் சந்தித்து பேசியது.
இந்நிலையில், ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர். ANI செய்தி நிறுவனத்துக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியிலும், திமுக கூட்டணியில் நீடிக்க கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்ற நிபந்தனையை முன்வைத்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக Times Now டிவி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: கிரிஷ் சோடங்கர் என்னுடைய பாஸ்.. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளர்.. பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர்.. கிரிஷ் சோடங்கர் என்ன சொல்லி இருந்தாலும் அது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கருத்துதான்.
என்னுடைய பாஸ்.. என்னுடைய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் என்ன சொல்கிறாரோ அவரது கருத்துதான் என்னுடைய கருத்தும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
