’கூட்டணி குறித்து முடிவு செய்யுங்க’.. திமுகவை சீண்டும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டியும் எழும் கேள்விகளும்!

Published On:

| By Mathi

Girish Chodankar DMK Alliance Congress

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸும் பங்கு பெற வேண்டியது அவசியம்; கூட்டணியை உறுதி செய்வது தொடர்பாக திமுகவின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்துள்ள பேட்டி பல்வேறு விவாதங்களை உருவாக்கி உள்ளது.

ANI செய்தி நிறுவனத்துக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி: தேர்தலை எதிர்கொள்ள, காங்கிரஸின் வலிமையை வெளிப்படுத்த எங்களுக்கு அதிக காலம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 58 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் இல்லை. ஆனாலும் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் கடுமையாக உழைக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த ஜனநாயக நடைமுறையில் (தேர்தலில்) ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். தேர்தல் என்பது மிகப் பெரிய திருவிழா. விருப்ப மனுக்களை வாங்குவதற்கு காங்கிரஸ் தொண்டர்களிடம் நாங்கள் பணம் கேட்கவில்லை; ஏனெனில் காங்கிரஸின் உள்விவகாரம் இது. காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது சொந்த பணத்தை செலவழித்து உழைக்கின்றனர். காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் விருப்ப மனுக்களைப் பெற பணம் பெறவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு

ADVERTISEMENT

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை உருவாக்கி உள்ளது. தேர்தலுக்கு முன் எங்கள் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாக்குறுதிகளை வழங்குவர். தேர்தல் அறிக்கைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற வேண்டியது அவசியம்.

திமுகவுக்காக காத்திருப்பு

ADVERTISEMENT

திமுக தலைவர்கள் டெல்லிக்கு வந்து எங்களது தலைவர்களை சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அறிவித்தார். இதையடுத்து 5 பேர் குழு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். டிசம்பர் 15-ந் தேதிக்குள் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அப்போதுதான் வேட்பாளர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யவும் அவர்களை தேர்தலுக்கு தயார்படுத்தவும் எங்களுக்கும் போதுமான அவகாசம் கிடைக்கும். தற்போது திமுகவின் கைகளில்தான் முடிவுகள் இருக்கின்றன. திமுகவுக்காக காத்திருக்கிறோம்.

கிரிஷ் சோடங்கர் பேட்டியும் எழும் கேள்விகளும்

1) திமுக தலைமையிலான கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி நீடித்து வருகிறது. ’கூட்டணி கட்சியான’ திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குதான் 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ் என்கிறார் கிரிஷ் சோடங்கர்.. ஆனால் இதே பேட்டியில், “கூட்டணி குறித்து டிசம்பர் 15-ந் தேதிக்குள் திமுக முடிவு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருந்தோம். தற்போது திமுகவின் முடிவுக்காக காத்திருக்கிறோம். “The ball is completely in the court of DMK” என கிரிஷ் சோடங்கர், ‘ பந்தை’ திமுகவின் கைகளில் திணிப்பது எதற்காக? ஏன் இந்த குழப்பமான நிலை?

2) ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது அவசியம்’ என சொல்கிறார் சோடங்கர். அப்படியானால் ‘ஆட்சியில் பங்கு’ என்பதை திமுகவுடனான கூட்டணிக்கான முதன்மையான ’நிபந்தனையாக’ முன்வைக்கிறதா காங்கிரஸ்?

3) காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் அல்லது மிக மிக அதிகபட்சம் 30 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது; திமுகவின் இந்த முடிவை மாற்றக் கூடிய பேரம் பேசும் வகையில் கிரிஷ் சோடங்கர் இந்த பேட்டியை கொடுத்துள்ளாரா?

4) திமுக நிச்சயமாக 30 தொகுதிகளுக்கும் மேல் தராது; அதனால், ”கூட்டணிக்கான பந்து திமுகவிடம்.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம்” என திமுகவால் ஏற்கவே முடியாத நிபந்தனைகளை விதித்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான முன்னோட்டம்தானா கிரிஷ் சோடங்கரின் இந்த பேட்டி?

5) திமுகவுடன் காங்கிரஸின் 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியது சர்ச்சையானது. ஆனால் காங்கிரஸ் மேலிட முடிவுக்கு எதிராக செயல்பட்டதாக பிரவீன் சக்கரவர்த்தி மீது எந்த ஒரு நடவடிக்கையையும் காங்கிரஸ் மேலிடம் எடுக்காமல் இருக்கிறது; அத்துடன் விஜய்யுடன் காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் பேசிவருவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

தற்போது, திமுகவுடனான பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் கிரிஷ் சோடங்கர், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” தருவோம் என்ற தவெக தலைவர் விஜய்யின் குரலை சார்ந்து பேசுவது என்பது எல்லாம் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவெக தலைமையிலான கூட்டணியில் இணையப் போவதை வெளிப்படுத்துகிறதா? என்பது உள்ளிட்ட கேள்விகள் அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுகின்றன.

ANI செய்தி நிறுவனத்துக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share