காங்கிரஸ் தனித்துப்போட்டி : செல்வப்பெருந்தகை – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மோதல்!

Published On:

| By christopher

தமிழகத்தில் இன்னும் எத்தனை காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பிய நிலையில், மேடையிலேயே அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற  காங்கிரஸ் எம்.பி.க்கள்  கெளரவிக்கப்பட்டு, 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எத்தனை காலம் பிறரை சார்ந்திருக்க போகிறோம்?

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ”காங்கிரஸ் கட்சி 139 ஆண்டுகளை கடந்து நிற்கிறது. நமக்கு தான் எல்லா மக்களையும் ஆதரிக்கின்ற, அரவணைக்கின்ற சித்தாந்தம் இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றுள்ளது. இரண்டு சுயேச்சைகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். என்.டி.ஏ கூட்டணி அமைச்சர்கள் இப்போது காங்கிரஸுக்கு வந்தால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இந்த தேர்தலில் நம்மை விட்டு பிரிந்தவர்கள் எல்லாம் இன்று ராகுல் காந்தியின் கையை வலுப்படுத்த வந்து நிற்கிறார்கள்.

இந்த நிலையில் நான் கேட்பது ஒன்றுதான். நாம் எந்த திசையில் செல்ல போகிறோம்?  நாம் இன்னும் தமிழகத்தில் எத்தனை காலம் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதை தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசினார்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு செல்வப்பெருந்தகை இவ்வாறு  பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆசை இருக்கலாம்; பேராசை கூடாது!

இதற்கு பதிலளிக்கும் விதமாக  அதே மேடையிலேயே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிறிது நேரத்தில் பதிலளித்து பேசினார்.

அவர் பேசுகையில், ”தமிழகத்தில் இன்று 40-க்கு 40 வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் தான். அதை நீங்கள் மறந்துவிட கூடாது.

அன்று தனித்த நின்ற போது சிவகங்கையிலும், கன்னியாகுமரியிலும் 1 லட்சம் வாக்குகள் பெற்று தோற்றோம். மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தோம்.

நாம் வெல்ல வேண்டும் என்பதில் யாருக்கு ஆசை இல்லை? ஆசை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என்பதே நம் இலக்கு. அதை விட்டு நான் தனியாக நிற்பேன், நான் தோற்பேன் என்றால் அது உங்கள் இஷ்டம். ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கருத்தை எதிர்த்து திமுகவுக்கு ஆதரவாக இளங்கோவன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஜூன் 20 சட்டமன்றம் கூடும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share