தொலைதூர கல்வியில் முறைகேடு: பல்கலைக்கழக ஊழியர்கள் டிஸ்மிஸ்!

Published On:

| By Monisha

பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு நடந்ததாக பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் அருகே கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது .

ADVERTISEMENT

இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககத்தின் கீழ் உரிய அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தியது,

மற்றும் முன் கல்வித் தகுதி அல்லாத வெளிமாநில மாணவர்களைச் சேர்த்தது, படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்கள் வழங்கியது என்பது போன்று பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் கூறப்பட்டது .

ADVERTISEMENT

இந்த புகாரின் அடிப்படையில் சேலம் லஞ்சம் ஒழிப்பு பிரிவு போலீசார், அப்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்கத்தின் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதன்பேரில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது .

அப்போது தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக இருந்த குணசேகரன், உதவி பதிவாளராக இருந்த ராமன் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது .

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், அறிக்கையில் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி தற்போது பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளராக பணியாற்றி வரும் ராமன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து தற்போது பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராக உள்ள ராமன் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துணைப்பதிவாளர் ராமன் இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவைச் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பிறப்பித்துள்ளார்.

மோனிஷா

காசி தமிழ்ச் சங்கமம்: மோடியை புகழ்ந்த இளையராஜா

காசிக்கும் தமிழகத்துக்கும் நீண்ட பந்தம் உண்டு: மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share