வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை, இசைஞானி இளையராஜா புகழ்ந்து பேசினார்.
உத்தரப் பிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசி), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதன் தொடக்க விழா, இன்று (நவம்பர் 19) வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, ”காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை, இங்கே அனைவரும் விளக்கினர். பாரதியார் இங்கே இரண்டு வருடம் படித்திருக்கிறார்.
இங்கே படித்து அவர் கற்றுக்கொண்ட விஷயங்களை, நாட்டுக்கு எடுத்துரைத்தார். காசி நகர்ப் புலவர்களின் பேச்சுகளை நேரில் கண்ட பாரதி,
‘காசியில் கேட்க ஒரு கருவி செய்வோம்’ என இந்தியாவில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாத நேரத்திலேயே பாடினார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என நதிகள் இணைப்பு திட்டம் வருவதற்கு முன்னரே பாரதி தன்னுடைய 22 வயதில் பாடிவிட்டுச் சென்றார்.
பாரதி தன்னுடைய 9-11 வயதில் இங்கே கற்று அறிவு பெற்றிருக்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அரிய விஷயமாகும்.
அதைப்போல், நீங்கள் அறியாத, இதுவரை குறிப்பிடப்படாத ஒரு விஷயத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
இங்கே கபீர், இரண்டு அடிகளில் தோகாவல்லியைப் பாடினார். அங்கே தமிழில் திருவள்ளுவர் திருக்குறளை இரண்டு வரிகளில் இயற்றினார்.
தோகாவில் 8 சீர்கள் உள்ளன. திருக்குறளில் 7 சீர்கள் உள்ளன. இவ்விரு செய்யுள்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
கபீர் ஆன்மிகத்தைப் பற்றிப் பாட, திருவள்ளுவர் முப்பால் பற்றி எழுதினார்.
கர்நாடக சங்கீதத்தின் மாமேதை முத்துச்சாமி தீட்சிதர் இங்கே கங்கையில் மூழ்கி எழுந்தபோது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையை பரிசளித்து இருக்கிறார்.
அந்த வீணை இன்னும் இருக்கிறது. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட பெருமைமிகுந்த காசி நகரிலே, காசி தமிழ்ச் சங்கமத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி நமது பிரதமருக்கு தோன்றியது என்பதை நான் வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்” எனச் சொல்லிவிட்டு பிரதமர் மோடியைப் பார்த்து அதே கருத்தை ஆங்கிலத்தில் சொன்னார்.
அதை, மேடையில் அமர்ந்திருந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மோடியிடம் எடுத்துரைத்தார்.
அதற்கு பிரதமர் மோடி, சிரித்தபடி இளையராஜாவுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பின்னர், “எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த புகழும் தருக; மென்மேலும் ஓங்குக” என மோடியை வாழ்த்தி விடைபெற்றார்.
ஜெ.பிரகாஷ்
நாளை சூறாவளிக் காற்று: எந்தெந்தப் பகுதிகளில் வீசக்கூடும்?
ராஜிவ் கொலையாளிகளைப்போல் விடுதலை செய்யக்கோரி ஷ்ரத்தானந்தா மனு!