பணியில் இருந்து நீக்கப்பட்டாலும் முன்னாள் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் சுமார் ரூ.318 கோடி பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் 238 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளார். அதனை சுமார் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
அதிரடி நீக்கம்!
இதனைதொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த உயர்மட்ட ட்விட்டர் நிர்வாகிகளை எலோன் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார்.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருவகையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்த எலோன் மஸ்கின் அதிரடி நடவடிக்கையாக தோன்றினாலும், மறுபுறம், அவ்வாறு நீக்கப்பட்ட உயர மட்ட நிர்வாகிகளுக்கு பெரும் தொகையை செலுத்த வேண்டும் என்பதே உண்மை.
பராக் அகர்வாலுக்கு மட்டும் $38.7 மில்லியன்!
இதுகுறித்து நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை தகவலின் படி, பராக் அகர்வால் மட்டும் மிகப்பெரிய தொகையான $38.7 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.318 கோடி) பெறுவார் என தெரிவித்துள்ளது.
அவரை போல் ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் 25.4 மில்லியன் டாலர்களையும், தலைமை சட்ட அதிகாரி விஜயா காடே 12.5 மில்லியன் டாலர்களையும், தலைமை வாடிக்கையாளர் அதிகாரியான சாரா பெர்சோனெட்டே $11.2 மில்லியனும் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட வருமானம் ரூ.72 கோடி!
ட்விட்டர் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டில் ஊழியராக இணைந்தார் இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால். மும்பை ஐஐடி மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பராக் அகர்வால் 2017ஆம் ஆண்டில் ட்விட்டர் சிடிஓவாக பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் ட்விட்டர் தலைமை பதவியில் இருந்து ஜாக் டார்சி வெளியேறிய பின் 2011 நவம்பர் மாதம் சிஇஓ பதவிக்கு பராக் அகர்வால் வந்தார்.
பராக் அகர்வாலின் சம்பளம் மட்டும் ஆண்டுக்கு 1 மில்லியன் டாலர். இதெல்லாம் போக போனஸ், பங்குகள் எல்லாவற்றையும் சேர்த்தால் 12 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 கோடி) மேல் கிடைக்கிறது.
இந்நிலையில் அவரை தற்போது சிஇஓ பதவியில் இருந்து நீக்கியிருப்பதன் மூலம் அவரது முழு பங்கு தொகையான ரூ.318 கோடியை எலோன் மஸ்க் வழங்க வேண்டும்.
25 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணி நீக்கம்!
முன்னதாக, ட்விட்டர் ஊழியர்களில் இருந்து 75 சதவீதம் அல்லது 5,600 ஊழியர்களை மஸ்க் நீக்குவார் என்று முந்தைய அறிக்கைகள் குறிப்பிட்டன.
எனினும் ட்விட்டர் தலைமையகத்திற்கு நேற்று வந்த மஸ்க் அங்கிருந்த ஊழியர்களிடம், 75 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
எனினும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொடர்ந்து மஸ்க் இன்னும் எவ்வளவு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போகிறார், அவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள உலகமே ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கோவை கார் வெடிப்பில் 109 பொருட்கள் பறிமுதல்: என்.ஐ.ஏ எப்ஐஆரில் தகவல்!
பிரக்னன்சி கிட்: ரசிகர்களை குழப்பிய நடிகைகள்!