மதியம் சாப்பிட்ட பிறகு தூக்கம் வர காரணம் என்ன, அதனை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.
மதிய உணவிற்குப் பிறகு லேசான தூக்க உணர்வு (Reasons for Feeling Sleepy) ஏற்படுவது இயல்பானதுதான். அது சிறிது நேரத்தில் சரியாகிவிடும். ஆனால், தினமும் சாப்பிட்ட பிறகு உங்கள் கண்கள் சொருகத் தொடங்கி வேலையில் ஆர்வம் குறைந்து, உடல் மந்தமாக உணர்ந்தால், சில தவறான பழக்கங்கள் காரணமாக இருக்கலாம். பலர் இதை வெறும் சோர்வு என்று நினைத்து புறக்கணித்துவிடுகிறார்கள். ஆனால் உங்கள் உடல் உணவைச் சரியாகச் செரிமானம் (Digestion) செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம். மதிய உணவுக்குப் பின் சோர்வு ஏற்படுத்தும் 3 விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மதிய உணவில் அதிக மாவுச்சத்து
உங்கள் உணவில் வெள்ளை அரிசி, மாவு, இனிப்பான பானங்கள் அல்லது அதிகப்படியான ரொட்டி இருந்தால் சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கலாம். இது அதிக இன்சுலினை (High starch in lunch) வெளியிடுகிறது, இது ரத்த சர்க்கரை அளவில் திடீர் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும். இந்த ஏற்ற இறக்கம் என்பது சோர்வு மற்றும் தூக்க உணர்வை ஏற்படுத்தும். ஆகவே புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய சமச்சீரான உணவை மதியம் எடுத்துக்கொள்ளுங்கள். இது நீண்ட காலத்திற்கு ஆற்றலைத் தக்கவைக்க உதவுகிறது. மாவுச்சத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மதிய உணவைத் தவிர்ப்பது நல்லது.
அவசர அவசரமாக சாப்பிடுவது
பலர், தங்களின் பரபரப்பான வேலைபளு காரணமாக சில நிமிடங்களிலேயே உணவை சாப்பிட்டு முடிக்கிறார்கள். விரைவாக சாப்பிடுவதால் மூளைக்கு வயிறு நிறைந்த சமிஞ்சையை அனுப்ப முடியாமல் போகிறது. இது அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. ஒரே நேரத்தில் அதிக அளவு உணவு வயிறை (Eating hurry) அடையும்போது, செரிமானத்துக்கு உடல் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. இது செரிமான மண்டலத்திற்கான ரத்த ஓட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியைத் திசை திருப்புகிறது. இது சிலருக்கு சோர்வையும் தூக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும். மெதுவாகச் சாப்பிடுவதும், உணவை நன்கு மென்று சாப்பிடுவதும் இந்தப் பிரச்சனையைத் தணிக்க உதவும்.
உடல் இயக்கமின்மை
சாப்பிட்ட உடனேயே நாற்காலியில் அமர்ந்திருப்பது அல்லது நீண்ட நேரம் அசையாமல் வேலை செய்வது போன்றவையும் பிற்பகல் நேரத் தூக்கக் கலக்கத்திற்கு (Physical inactivity) ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு லேசான நடைப்பயிற்சி அல்லது சில நிமிட உடற்பயிற்சி, உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலை உடல் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. உணவுக்குப் பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் லேசாக நடப்பது, ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், சோர்வைக் குறைக்கவும் உதவும். இது வளர்சிதை மாற்றத்திற்கும் துணைபுரிகிறது.
மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்வது?
தினமும் மதிய உணவிற்குப் பிறகு தூக்கம் வருவது போல் உணர்ந்தால் உங்கள் உணவின் தரம், அளவு மற்றும் உண்ணும் பழக்கவழக்கங்களைக் கவனிக்க வேண்டும். உங்கள் உணவில் புரதம் (Protein in food), சாலட் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் அளவை அதிகரிக்க வேண்டும். மெதுவாகச் சாப்பிடுங்கள், உணவிற்குப் பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். உங்கள் பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், நாள் முழுவதும் நீங்கள் அதிக சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் உணர முடியும்.
