18 வருட காத்திருப்புக்கு பின், முதல்முறையாக ஐபில் கோப்பையை கைப்பற்றியுள்ளது பெங்களூரு அணி. இதனால், நேற்று (ஜூன் 3) இரவு முதல் பெங்களூருவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.
இன்று (ஜூன் 4) மாலை கர்நாடகா சட்டமன்ற வளாகம் மற்றும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, ஆர்சிபி ரசிகர்கள் மதியம் முதல் சட்டமன்றம் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம் முன்பாக குவியத்தொடங்கினர். கடும் கூட்ட நெரிசலால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், கர்நாடகா சட்டமன்றத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தவார் சந்த் கெக்லாட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை பாராட்டினர்.
ஆர்.சி.பி-யின் வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. rcb fans stampede 11 feared dead