காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்க இருக்கும் நடைபயணத்தை ஒட்டிய நிகழ்வில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இதை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இன்று (ஆகஸ்டு 28) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் ( பாரத் ஜூடோ யாத்ரா ) மேற்கொள்வார் என்று அண்மையில் ராஜஸ்தானில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நடைபயணம் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமாரியில் தொடங்கி காஷ்மீரில் முடிகிறது.
இந்நிலையில் , ஆகஸ்ட் 22 ஆம் தேதி நமது மின்னம்பலம்.காம் இதழில் வெளியான டிஜிட்டல் திண்ணையில், ‘ராகுல் பாத யாத்திரை ஸ்டாலின் வருவாரா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில், ‘ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரைக்கு கூட்டணிக் கட்சித் தலைவரான முதல்வர் ஸ்டாலினை அழைக்க வேண்டும் என்றும், இதை முழுக்க முழுக்க காங்கிரஸ் நிகழ்ச்சியாகவே நடத்த வேண்டும் என்றும் இருவேறு கருத்துகள் காங்கிரசுக்குள் நிலவியதைக் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் , இன்று ( ஆகஸ்ட் 28 ) சென்னை, சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய கே.எஸ் அழகிரி; “ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்குகிறார்.
அன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. பொதுக்கூட்டத்துக்கு முன்பாக காந்தி நினைவிடத்தில் மௌன அஞ்சலி செலுத்துகிறார். காமராஜருடைய நினைவிடத்துக்கும் அவர்கள் வருகிறார்கள்.
காந்தி நினைவிடத்துக்கு எங்கள் தலைவர் வருகிறபோது தமிழக முதலமைச்சர் அங்கே வந்து எங்கள் தலைவர் ராகுல் காந்திக்கு பொன்னாடை போர்த்தி, அந்த நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்கள்.
அதேபோல ஒவ்வொரு நாளும் எங்கள் தோழமை கட்சித் தலைவர்கள் இருவரை நாங்கள் அழைக்கிறோம். அவர்கள் வருகிறார்கள். நடைபயணம் துவக்குவதற்கு முன்பு தலைவருக்கு அவர்கள் வணக்கம் செலுத்துகிறார்கள்.
பத்து நிமிடங்கள் ராகுல் காந்தியோடு நடைபயணத்தில் கலந்துகொள்கிறார்கள். தங்கள் கருத்துகளைச் சொல்கிறார்கள்.
எனவே இந்த நான்கு நாட்களும் தமிழகத்தில் இருக்கக் கூடிய எங்கள் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் அனைத்து தலைவர்களும் பங்கு வகிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
–மு.வா.ஜெகதீஸ் குமார்









