ராகுல் காந்தியின் சாதி… ’அனுராக் சர்ச்சை பேச்சு : ஷேர் செய்த மோடி – காங்கிரஸ் பதிலடி!

Published On:

| By christopher

ராகுல்காந்தியின் சாதியை கேட்டு விமர்சித்த அனுராக் தாக்கூர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (ஜூலை 31) மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் நேற்று சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் வாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ”சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா கூட்டணி நிறைவேற்றும். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா தயாரிக்கும் புகைப்படத்தில் தலித், ஆதிவாசி அல்லது பிற்படுத்தப்பட்ட நபர் யாரும் இல்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

அதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “சாதி பற்றி தெரியாதவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள்” என்று விமர்சித்தார். இந்த பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அனுராக் தாகூர் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இந்த கருத்தை சொன்னாலும் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதமாகவே இந்த கருத்து பார்க்கப்பட்டது.

இதனையடுத்து தாகூர் தன்னை அவமதித்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அவர், “ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை யார் எழுப்பினாலும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். நான் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். அனுராக் தாகூர் என்னை துஷ்பிரயோகம் செய்து இழிவுபடுத்தியுள்ளார். அவர்கள் தொடர்ந்து இழிவுபடுத்தட்டும். ஆனால், இந்த நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து ராகுல்காந்தி ‘தியாகி சாதி’யை சேர்ந்தவர் என அவையில் நடந்த சலசலப்புக்கு இடையே காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

இதற்கிடையே அனுராக் தாக்கூரின் பேச்சை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, “எனது இளம் மற்றும் ஆற்றல் மிக்க சக ஊழியரான அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சு அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய ஒன்று. உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை. I.N.D.I.A கூட்டணியின் அழுக்கு அரசியலை அம்பலப்படுத்துகிறது” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி உட்பட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடாளுமன்ற வரலாற்றில் வெட்கக்கேடான சம்பவம்!

ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில், “கட்டாயம் கேட்க வேண்டும்’ என்று உயிரியல் அல்லாத பிரதமர், அனுராக் தாக்கூரின் பேச்சை பகிர்ந்தது மிகவும் கீழ்த்தரமான, அரசியல் சாசனத்துக்கு விரோதமான, கண்டிக்கத்தக்க நடவடிக்கை. இதன்மூலம் மூலம், நாடாளுமன்ற சிறப்புரிமையை கடுமையாக மீறுவதை மோடி ஊக்குவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு புதிய, வெட்கக்கேடான சம்பவம். பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் நரேந்திர மோடியின் ஆழமான வேரூன்றிய சாதிவெறியை இது பிரதிபலிக்கிறது” என அவர் விமர்சித்துள்ளார்.

மோடி உத்தரவின் பேரில் நடந்ததா?

அதே போன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் விமர்சித்துள்ளார். அவர், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது இந்த நாட்டின் 80 சதவீத மக்களின் கோரிக்கை. இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இப்போது நாடாளுமன்றத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். இது தனது உத்தரவின் பேரில் நடந்ததா என்பதை நரேந்திர மோடி தெளிவுபடுத்த வேண்டும்” என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும் அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வயநாடு நிலச்சரிவு : உதவிக்காக களமிறங்கிய பிரபல நடிகை – வீடியோ வைரல்!

சட்டெனெ அதிகரித்த தங்கம் வெள்ளி விலை… இன்றைய நிலவரம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share