சர்வதேச தாய்மொழி தினம்: தமிழே நீ வாழ்ந்திடு! – மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Published On:

| By Pandeeswari Gurusamy

சர்வதேச தாய்மொழி தினமான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகரும் மநீம தலைவருமான கமல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி மற்றும் அன்றாட வாழ்வில் பன்மொழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் மொழியியல் மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில் யுனெஸ்கோ இத்தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த ஆண்டு (2026) “Youth voices on multilingual education” (பன்மொழிக் கல்வியில் இளைஞர்களின் குரல்கள்) என்ற கருப்பொருளில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

சர்வதேச தாய்மொழி தினமான இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

“தமிழே நீ வாழ்ந்திடு!

ADVERTISEMENT

இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

நம் தமிழைக் காத்து – அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்.. தமிழுக்கும் தமிழருக்கும்

அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்…” என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாவேந்தர் பாரதிதாசனின் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப நம் உயிர்மூச்சுக்கு இணையான தாய்மொழியாம் தமிழ் மொழியைப் போற்றி கொண்டாடிடும் உலக தாய்மொழிகள் தினம் இன்று.

ஏனைய மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக, தமிழ் இனத்தின் நாகரிகமாக, ஏராளமான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் உள்ளடக்கிய உலகின் தொன்மையான மொழியாகப் போற்றப்படும் நம் தமிழ் மொழியைப் பேணிக் காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் பதிவில், “தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! அன்னை தமிழை காப்போம்!
அனைத்து மொழிகளையும் கற்போம்!

தே.மு.தி.க-வின் அசைக்க முடியாத கொள்கை இதுவே! அனைவருக்கும் இனிய உலக தாய்மொழி நாள் வாழ்த்துகள்!
இளைஞர்களின் குரல்களால் பன்மொழிக் கல்வியை வளர்ப்போம்.
தமிழை டிஜிட்டல் உலகில் உயிர்ப்புடன் வைத்து, உலகெங்கும் தமிழனின் பெருமையை நிலைநாட்டுவோம்!
கேப்டன் அவர்களின் தமிழ் பெருமைக் கனவை நிறைவேற்றுவோம்.

எல்லா தாய்மொழி உரிமை போராளிகளுக்கும் வீர வணக்கம்!

வாழ்க தமிழ்! வாழ்க உலகின் அனைத்து தாய்மொழிகளும்!” என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்! என்ற முண்டாசு கவிஞன் பாரதியாரின் வரிகளை போற்றும் வகையில் இன்று உலகத் தாய்மொழி தினத்தில் உலகத் தமிழர் அனைவருக்கும் என் இனிய தாய்மொழி தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழி என்பது சொற்கள் மட்டும் அல்ல, அது நம் சிந்தனை, பண்பு, வரலாறு மற்றும் உணர்வுகளின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம் அதை காக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. நம் தாய்மொழியை நேசித்து, பேணி வளர்த்தால் தான் நம் அடையாளம் என்றும் நிலைத்திருக்கும்!” என பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி தனது எக்ஸ் பதிவில், ” மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி.

அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.

அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம்.

மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.

தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share