நயினாரின் அநாகரீகம்: பாஜக பெண் தலைவர்கள் மெளனம் காப்பதா? -கனிமொழி சோமு எம்பி உள்ளிட்ட தலைவர்கள் ரியாக்சன்

Published On:

| By Pandeeswari Gurusamy

நயினார் நாகேந்திரன் விஜய் – திரிஷா குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி வைத்துள்ளார் என்ற ரீதியில் விஜய் பேசியிருந்தார்.விஜயின் இந்த விமர்சனம் குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். திரிஷா வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும்” என்று தெரிவித்திருந்தார்.நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், “நயினார் நாகேந்திரன் ஒரு பண்பாளர் தான். அவரை நீண்ட நெடிய காலமாகத் தெரியும். அப்படி பேசுபவர் இல்லை. எந்தச் சூழலில் அப்படி பேசினார் என்று தெரியாது. அது உள்நோக்கத்தோடு அப்படி பேசியிருக்க மாட்டார். இது முழுக்க முழுக்க தனிப்பட்ட விஷயம். இதில் ஒரு நடிகையைத் தொடர்புப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். அவருடைய மகளாக நினைத்து பேசினாரா, தம்பியாக நினைத்து பேசினாரா என்று எனக்குத் தெரியவில்லை. நான் அதைப் பார்க்கவும் இல்லை. இது மாதிரி பொதுவெளியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது என்று தான் நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “பொதுவாக தனிப்பட்ட விமர்சனங்களை யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியும்” என்றார்.

ADVERTISEMENT

நயினார் நாகேந்திரனின் விமர்சனம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ஒவ்வொரு கட்சித் தலைவர்களுக்கும் ஒரு கருத்து இருக்கிறது, ஒரு பாணி இருக்கிறது. தனிப்பட்ட முறையில் யார் பேசியதையும் நான் குற்றம் சொல்ல முடியாது. யார் தங்களுடைய நிலையை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர்கள் அதை முறையாக சரிசெய்து கொள்வார்கள். இதில் நான் போய் ஆஜராக முடியாது. அவர் சொன்னதை தப்பு என்றும் சொல்ல மாட்டேன். அது அவருடைய எண்ணமாக இருக்கலாம், பாணியாக இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரனின் கருத்து குறித்து திமுக எம்.பி கனிமொழி என்விஎன் சோமு, தனது எக்ஸ் பதிவில்,அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் விமர்சனம் செய்வது அநாகரிகம்..!! அதிலும், அரசியலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் மாண்பையும் கண்ணியத்தையும் இழித்துப் பேசுவது பெண்மையை களங்கப்படுத்தும் செயல் நயினார் நாகேந்திரனை பாஜகவில் உள்ள பெண் தலைவர்களே கண்டிக்காமல் மவுனம் காப்பது அநீதி…!”என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share