பக்கவாட்டிலும் பிங்க் வண்ணம்: பெண்கள் கோரிக்கை!

தமிழகம்

பெண்கள் இலவசப் பேருந்துகளை எளிதில் கண்டுபிடிக்கும் வண்ணம் பிங்க் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இன்று (ஆகஸ்ட் 6) முதல் தொடங்கிவைக்கப்பட்டிருக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டு, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 2021ம் ஆண்டு மே 8ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் ஓர் ஆண்டை நிறைவுசெய்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதற்கென மகளிருக்கு தனியாக இலவச டிக்கெட்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்துக்காக, தமிழக அரசின் சார்பில் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. என்றாலும், இத்திட்டத்திற்கு பெண்கள் தரப்பில் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இந்த இலவச பயணத் திட்டத்துக்காக 7 ஆயிரத்து 321 சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 2022ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, நாளொன்றுக்கு 36 லட்சம் பெண்கள் பயணம் செய்து வருவதாகவும், ஏப்ரல் மாதம் இறுதிவரையில் சுமார் 115 கோடி பெண்கள் பயணித்துள்ளதாகவும் தமிழக அரசின் விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சென்னையில் ஓடும் வெள்ளை நிறப் பேருந்துகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருப்பதால், எது இலவசப் பேருந்துகள், எது கட்டணப் பேருந்துகள் என கண்டுபிடிக்க முடியவில்லை என பெண்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து, பெண்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வண்ணம், இலவச பேருந்துகளை தனியாக கண்டுகொள்வதற்கு அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, பிங்க் நிறத்தில் பேருந்துகளை இயக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அந்த வகையில், பெண்களுக்கான இலவசப் பேருந்துகளின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் பிங்க் நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துகளை இன்று (ஆகஸ்ட் 6) சென்னை அண்ணாசதுக்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அத்துடன், அந்தப் பேருந்தில் ஏறியும் பயணம் செய்தனர்.

தற்போது முதற்கட்டமாக சென்னையில் 60 பேருந்துகளுக்கு பிங்க் நிறம் பூசப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பேருந்துகளுக்கு விரைவில் பிங்க் நிறம் பூசப்படும் எனவும், பக்கவாட்டு நிறம் எப்போதும் போலவே இருக்கும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

பெண்கள் மீண்டும் கோரிக்கை

இந்த நிலையில் இரண்டு பக்கம் மட்டும் பிங்க் நிறம் பூசியது பற்றி சலசலப்பு கிளம்பியிருக்கிறது. “இலவசப் பேருந்துகளில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் மட்டும் பூசப்பட்டு இருக்கும் பிங்க் நிறத்தால் மீண்டும் பெண்கள் குழப்பமடைந்திருக்கின்றனர். முன்பக்கம் மற்றும் பின்பக்கம் மட்டும் வண்ணம் பூசப்பட்டு இருப்பதால், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பெண்கள், அதை ஒருவேளை கவனிக்காதபோது அது பிங்க் நிறப் பேருந்துதானா என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்?

தவிர, முன்பக்கமோ அல்லது பின்பக்கமோ போய்ப் பார்த்து ஏறுவதற்குள் பேருந்து கிளம்பிவிடும். பக்கவாட்டிலும் அதே நிறத்தைப் பூசினால்தானே அது பெண்களுக்கான பேருந்து என முழுமையாய் அறிய முடியும். இளம்பெண்கள் எளிதாய்க் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், வயதான பெண்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்வார்கள்? ஆகையால், அரசு எதைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்ய வேண்டும். அதன்படி, பக்கவாட்டிலும் பிங்க் நிறத்தைப் பூசினால்தான் அனைத்துப் பெண்களாலும் அது இலவசப் பேருந்து என கண்டுபிடிக்க முடியும். நடவடிக்கை எடுக்குமா அரசு?” என்கின்றனர், பெண்கள்.

ஜெ.பிரகாஷ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.