கன மழை: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு!

Published On:

| By Kalai

தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.

முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், ஈரோடு, கடலூர், திருப்பூர் ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 4) ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது மழை பாதிப்பை எதிர்கொள்ளவும், நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவது தொடர்பாக அமைச்சர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் பல்வேறு அறிவுரைகள் முதல்வர் கூறியிருக்கிறார்.

விழிப்போடு இருங்கள்!

குறிப்பாக மழை பாதித்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நெல் மூட்டைகள் மழையால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்களைக் கொண்டு மூடவேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் விழிப்போடு இருந்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுக

உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் நீர் வெளியேற்றத்தை அதிகப்படுத்தக்கூடாது. நீர் வெளியேற்றும் அளவை இரவு நேரத்தில் அதிகப்படுத்துவதை தவிர்க்கவேண்டும். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்கப்படவேண்டும். குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கவேண்டும்.  நிவாரண உதவிகள் வழங்கவேண்டும்.

களஆய்வு செய்ய உத்தரவு

அனைத்து நிலை அதிகாரிகளையும் கரையோரப் பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தவேண்டும். கனமழையால் பயிர்சேதம் ஏற்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் களஆய்வு மேற்கொள்ளவேண்டும்.  மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்களும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும். அனைத்து மீட்பு மற்றும் நிவாரணக்குழுக்களை தயார்நிலையில் வைக்கவேண்டும்” என்பது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கியிருக்கிறார்.

கலை.ரா

சசிகலா வழக்கை கைவிட்ட வருமான வரித்துறை: காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share