காவிரியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்!

தமிழகம்

கனமழை காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருக்கும் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் தமிழக பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் அணையின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுகிறது.

இதனால் காவிரி ஆறு மற்றும் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது நீர் வரத்து அதிகரிப்பால் 2 லட்சமாக அதிகரித்துள்ளது. அணையின் 16 கண் மதகு வழியாக நீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

மேட்டூரில் இருந்து பூலாம்பட்டிக்கு செல்லக்கூடிய சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாலையில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலையில் யாரும் பயணிக்க வேண்டாம் என காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் வெள்ளம்

காவிரி கரையோரத்தில் 100க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் வெள்ளம் புகுந்ததால் பருத்தி, வாழை போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தென்னை மரங்கள், மாமரங்கள் உள்ள நிலங்களும் தண்ணீரில் முழ்கியுள்ளது.

நீர் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரும், அணையில் இருந்துவெளியேறும் தண்ணீரும் ஒன்று சேரக்கூடிய சங்கிலி முனியப்பன் என்ற இடத்தில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி தாழ்வான பகுதியாக இருந்து மேம்படுத்தப்பட்டாலும், வெள்ளத்தின் காரணமாக மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

பொரையூர், தங்காமாபுரிப்பட்டணம், பெரியார் நகர், அண்ணா நகர், ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அண்ணா நகர் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மக்களின் ஆர்வமும், அச்சமும்

காலை 7 மணிக்கு சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் அடி தான் வந்து கொண்டிருந்தது. காலை 10.45 மணியில் இருந்து நீர் திறப்பு அதிகரித்து உள்ளதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் சீலநாயக்கன்பட்டி-பூலாம்பட்டி வரை இடையில் 19 கிலோ மீட்டர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் பார்பதற்கு சுனாமி ஊருக்குள் வந்தது போல் காட்சி அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இதுதவிர ஆபத்தை உணராமல், வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆர்ப்பரித்து வரும் நீரை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக காவிரி கரையோர பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் மக்கள் யாரும் நீரில் இறங்கக் கூடாது எனவும் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கு முன்பு 1961 ஆம் ஆண்டு மேட்டூர் அணைக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் நீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்ட நிலையில் வெள்ளம் ஏற்பட்டது.

முதலமைச்சர் ஆலோசனை

காவிரி வெள்ளம் தொடர்பாக திருச்சி, கரூர் உட்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் அமைச்சர் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.

மோனிஷா

அதிமுக அலுவலகம் : உச்ச நீதிமன்றத்தை நாடிய பன்னீர்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *