சசிகலா வழக்கை கைவிட்ட வருமான வரித்துறை: காரணம் என்ன?

தமிழகம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சசிகலாவின் செல்வ வரி கணக்கு வழக்கு இன்று (ஆகஸ்ட் 4) முடித்துவைக்கப்பட்டது.

1996 மற்றும் 97ம் ஆண்டுகளில் செல்வ வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என சசிகலாவுக்கு எதிராக வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு 2001ம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் அளித்த பதிலின் அடிப்படையில், சசிகலாவுக்கு அந்த குறிப்பிட்ட ஆண்டில் 4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 மதிப்பிலான சொத்துக்கள் இருந்ததாகவும், இந்தச் சொத்துக்களுக்கு 10 லட்சத்து 13 ஆயிரத்து 271ஐ ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்ட வருமானவரித் துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்துக்குட்பட்டு மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், 40 லட்சம் ரூபாய் கடனை கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித் துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. நிலுவையில் இருந்த வழக்கு, இன்று (ஆகஸ்ட் 4) நீதிபதிகள் மகாதேவன், முகம்மது சபீக் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமானவரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், வருமானவரித் துறையில் 1 கோடிக்கும் குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பதால், அதனடிப்படையில் சசிகலா மீதான செல்வ வரி வழக்கை கைவிடுவதாகவும், திரும்பப் பெறுவதாகவும் வாதம் வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருமானவரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை முடித்து உத்தரவிட்டுள்ளனர்.
ஜெ.பிரகாஷ்

நாகரிமான வார்த்தையே நம்முடைய வளர்ச்சி: ஓ.பன்னீர்செல்வம்

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *