தமிழகத்தின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோன்று சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
ரெட் அலர்ட்

தென்காசி, கோவையில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் இரண்டு மாவட்டங்களுக்கும் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 4) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, கரூர், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விடுமுறை அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் வால்பாறை பகுதிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை. திருவாரூரில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை உத்தரவை மீறி இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கடல் பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதாக பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது.
மழை தொடர்பான உதவிகளுக்கு
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மழை தொடர்பான உதவிகளுக்கு 1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா எண்கள் மூலமாகவும், 9445860848 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
மோனிஷா
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: அவசர எண்கள் அறிவிப்பு!