இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். Abhinandan India Pakistan
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து பாலகோட் பகுதியில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது. இத்தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
மேலும் பாலகோட் சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கையின் போது , இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் இயக்கிய போர் விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்து உயிர் தப்பிய அபிநந்தன் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார். அப்போது அபிநந்தனை கைது செய்தவர் பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா. பின்னர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த பின்னணியில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சரர்கோஹா பகுதியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் மொய்ஸ் அப்பாஸ் ஷா கொல்லப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.