என்.டி.ஏ.வில் ஓபிஎஸ் : அண்ணாமலை சூசகம்!

Published On:

| By Kavi

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக -பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவும் இணைந்துள்ளது. மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கான பணிகளை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 22) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் கூட்டணி தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

என்.டி.ஏ கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி என்று காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறாரே?

அவர் ஏன் குளிர் காய்ச்சல் வந்தது போல நேற்றிலிருந்து சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் மீது போர்க்கொடி தூக்கி காங்கிரஸ் கட்சியினர் டெல்லிக்கு போகிறார்கள். காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருக்கிறவர், திமுகவில் நாங்கள் இருக்கிறோமா? இல்லையா? என்று தெரியவில்லை. மேலிடத்தில் கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார். காங்கிரஸே இப்படி கந்தரகோலத்தில் இருக்கும் போது செல்வப்பெருந்தகை ஏன் இப்படி சுற்றுகிறார்?

ADVERTISEMENT

டிடிவி தினகரன் இணைந்தது பற்றி…

டிடிவி தினகரன் என்னுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய மனநிலை எனக்கு தெரியும். கோபம் இருந்தாலும் கூட மோடியை விட்டு போகக்கூடியவரல்ல. இடையில் சில மனக் கசப்பு இருந்திருக்கலாம். நான் ஆரம்பத்திலிருந்து டிடிவி தினகரன் எங்கேயும் போகமாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். அந்த இரு கட்சிக்கும் இருக்கும் சண்டை தனிப்பட்ட சண்டை. 2026ல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற, கசப்புகளை எல்லாம் மறந்து இப்போது நம்முடன் இணைந்திருக்கிறார்.

ADVERTISEMENT

என்.டி.ஏ கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவாரா?

ஓபிஎஸ் ஒரு சிறந்த தலைவர் மற்றும் பொறுமையின் உருவம். சத்திய சோதனைகளை எல்லாம் கடந்து நிற்கிறார். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. அவர் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நாளை பிரதமர் வருவது பற்றி?

மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, தேர்தல் போர்க்களத்திற்கான ஒரு சங்கு முழக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share