தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்காக கருங்கல், பாறாங்கல், எம் சாண்ட், ஜல்லி கற்கள், சாலை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படும் கற்கள் உள்ளிட்ட கற்களை தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டவிரோத சுரங்க தொழில் கனிமங்கள் கடத்தல் மற்றும் சேமிப்பு தடுப்பு மற்றும் கனிம வியாபாரிகள் விதிகள் 2011 விதி 3A- ல் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்தது.
அதன்படி தமிழகத்திலிருந்து காரைக்கால் மற்றும் புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மது பிரேம நாதன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு விசாரித்து வந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில், இந்த திருத்த விதிகளுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் தங்களுக்கு சொந்தமானது. அதை எங்கு விற்க வேண்டும் என்று முடிவெடுக்க எங்களுக்கு உரிமை உண்டு. எனவே தமிழக அரசின் இந்த தடையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு சட்டவிரோத கனிம சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தனர்.
மேலும் அந்த விதிகளின் அடிப்படையில் கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க முடியாது என்று கூறி தமிழக அரசின் தடையணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.









