மியான்மர் நிலநடுக்கம் : 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி.. பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு!

Published On:

| By christopher

myanmar earthquake death toll rises above 2000

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளதாக ஆளும் இராணுவ ஆட்சிக்குழு இன்று (மார்ச் 31) தெரிவித்துள்ளது. myanmar earthquake death toll rises above 2000

மியான்மரில் கடந்த 28ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரத்திற்குள் 6.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனால் மியான்மரின் மண்டலாய் மற்றும் சகாய்ங் மாகாணங்கள் உட்பட, அண்டைநாடான தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலும் வானுயர மற்றும் பாரம்பரிய பழமைவாய்ந்த கட்டிடங்கள் சரிந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் அந்நாட்டு மீட்புப் படையினர் ஓய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிந்த கட்டிட குவியல்களை அகற்ற அகற்ற, அதில் சிக்கியவர்கள் உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டு வருவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தொடரும் சோகம்!

இந்த நிலையில் மியான்மரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஐ எட்டியுள்ளது என்று அந்நாட்டு ஆளும் இராணுவ ஆட்சிக்குழு இன்று தெரிவித்துள்ளது.

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தோரின் எண்ணிக்கை 3,900 ஐ தாண்டியுள்ளதாகவும், இன்னும் 270 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த மியான்மரில் நடந்த இந்த பேரிடர் அந்நாட்டில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் சாய்ந்த மின்கம்பிகள் போன்றவற்றின் காரணமாக மீட்பு பணியிலும் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டுள்ளது.

மியான்மருக்கு மனிதாபிமான அடிப்படையில் முதல் நாடாக இந்தியா மீட்புப் பொருட்களை அனுப்பி வைத்த நிலையில், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவிப் பொருட்களும் மியான்மரை வந்தடைந்துள்ளன.

பாங்காக்கில் 19 பேர் பலி!

அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 30 மாடி வானளாவிய கட்டிடம் தரைமட்டமானது. இதில் சிக்கி 19 பேர் உயிரிழந்த நிலையில், இன்றைய நிலவரப்படி இன்னும் 77 பேரை காணவில்லை என பாங்காக் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இடிபாடுகளை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும் இந்த கட்டிடம் இடிந்த விழுந்தது தொடர்பாக விசாரணைக்கு தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நேரில் ஆய்வு!

இடிந்த கட்டிட பகுதிகளை தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா இன்று பார்வையிட்டார். அப்போது கட்டிட தொழிலாளர்களின் பிரதிநிதி ஒருவர், பிரதமர் அருகில் சென்று, மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு கூறி மண்டியிட்டு அழுதார்.

அவருக்கு ஆறுதல் கூறிய பிரதமர் ஷினாவத்ரா, “ஒருவருக்கொருவர் தைரியமாக இருங்கள்” என்று கூறியதுடன், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share