மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கோவையின் மொத்த மக்கள் தொகை 34 லட்சம் தான், ஆனால் கோவையில் மொத்தம் 20 லட்சம் முத்ரா வங்கி கணக்குகள் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள், அது சரியா? என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி, சலசலப்பை ஏற்படுத்தியது.
கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு குறு, தொழில் முனைவோர்கள், பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
இந்த சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், இது வரை கோவையில் 20 லட்சம் முத்ரா வங்கி கணக்குகள் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முத்ரா வங்கி 2015 ஆம் ஆண்டு, சிறு,குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு எந்த வித பிணையும் (Collateral Security) இல்லாமல் கடன் வழங்குவதற்காக, மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 2024 பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி, அதனை முழுதாக அடைத்த நபர்களுக்குத், தேவைப்பட்டால் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், செப்டம்பர் 12 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமனிடம், கோவையின் மொத்த மக்கள் தொகை 34 லட்சம் தான், ஆனால் கோவையில் மொத்தம் 20 லட்சம் முத்ரா வங்கி கணக்குகள் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள், அது சரியா? என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு “நான் அந்த சந்திப்பில் சொன்னதைத் திருப்பி சொல்கிறேன். இந்தியா முழுவதும், 49.5 கோடி முத்ரா வங்கிக் கணக்குகளின் மூலமாக ரூ.29.76 லட்சம் கோடி கடன் வழங்கியிருக்கிறோம் .தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 5.6 கோடி கணக்குகள் மூலம் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரைப் பொறுத்தவரை 20 லட்சத்திற்குச் சற்று அதிகமான முத்ரா கணக்குகள் மூலம், ரூ.13,180 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தான் நான் நேற்று(செப்டம்பர் 11)சொன்னேன்” என்றார் நிர்மலா சீதாராமன்.
இதற்கு, கோவையில் உள்ள மொத்த மக்கள் தொகையே 36 லட்சம் தான், எப்படி அவர்களுக்கு 20 லட்சம் முத்ரா கணக்குகள் தொடங்கப்பட்டது? இது சரியா? என்று மீண்டும் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு நிர்மலா சீதாராமன், “எனக்கு வந்த தகவலின் படி இது சரி தான். எதற்கும் வங்கிகளில் விசாரித்துச் சொல்கிறேன்” என்று பதிலளித்தார்.
ஏற்கனவே அன்னபூர்ணா விஷயத்தால், கண்டனங்களைச் சந்தித்து வருகிறார் நிர்மலா சீதாராமன். தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோக்களையும் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
புலியை கொன்று ரத்தத்தை உதட்டில் வைத்தார்- யுவராஜ் தந்தை யோக்ராஜ் புது கதை!
போர்ட் பிளேருக்கு அந்த பெயர் வந்தது எப்படி தெரியுமா? – பின்னணியில் சுவாரஸ்யம்!
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு… வீடியோவை டெலிட் செய்த திருமா