அசாம் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சிலை நள்ளிரவில் இடிக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் காசார் மாவட்டத்தில் உள்ள பைலாபூல் சந்தை பகுதியில், நேரு கல்லூரிக்கு முன்பாக ஜவஹர்லால் நேருவின் 10 அடி உயரச் சிலை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 23-ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் புல்டோசர் இயந்திரத்தைப் பயன்படுத்தி இந்தச் சிலையைத் தகர்த்துள்ளனர்.
மறுநாள் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள் சிலை உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆரம்பத்தில் இது விபத்து என்று கூறப்பட்டாலும், சிசிடிவி காட்சிகளில் திட்டமிட்டு புல்டோசர் மூலம் சிலை இடிக்கப்பட்டது உறுதியானது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து புல்டோசரை பறிமுதல் செய்துள்ளனர். ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “ஜவஹர்லால் நேருவின் சிலையைச் சேதப்படுத்தியது வெட்கக்கேடானது. இது இந்தியாவின் வரலாறு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான அப்பட்டமான தாக்குதல். நீங்கள் ஒரு தலைவரின் கொள்கைகளோடு முரண்படலாம், முடிவுகளைக் கேள்வி கேட்கலாம், அவர்களின் பாரம்பரியத்தை விவாதிக்கலாம். ஆனால் அவரது சிலையை உடைப்பது என்பது மாற்றுக் கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான செயல்.
நவீன இந்தியாவின் சிற்பியான நேருவின் பங்களிப்பைச் சிலைகளை உடைப்பதன் மூலம் வரலாற்றிலிருந்து யாராலும் மறைத்துவிட முடியாது. வரலாற்றை ஒரு சுத்தியலால் அழிக்க முடியாது. இத்தகைய சிறுபிள்ளைத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான செயல்கள் வெறும் விரக்தியையும், அறிவுசார் வெறுமையையும், இந்த நாட்டின் ஜனநாயக உணர்வை முற்றிலும் புறக்கணிப்பதையும் மட்டுமே காட்டுகின்றன,” எனத் தெரிவித்துள்ளார்.
