மின் கட்டண உயர்வு மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகளால் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு ‘பிஎம் சூர்யா கர்: இலவச மின்சார திட்டம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், வீடுகளில் கூரை மீது சோலார் பேனல்கள் பொருத்தப்படும். இதன் மூலம், மக்கள் தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இது மின் கட்டணத்தை கணிசமாகக் குறைப்பதுடன், உபரியாக உள்ள மின்சாரத்தை மீண்டும் மின் வாரியத்திற்கு அனுப்புவதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
இந்த திட்டத்தின் மூலம் 2026-27ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தும் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. சோலார் அமைப்புகள் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும். இதனால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மின்சாரத்திற்கான சார்பு குறையும். மேலும், மின்வெட்டு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு அரசு மானியம் வழங்குகிறது. பிஎம் சூர்யா கர் திட்டத்தின் கீழ், சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு நேரடி மானியம் வழங்கப்படும். 3 கிலோவாட் வரையிலான கூரை சோலார் அமைப்புகளுக்கு ரூ.78,000 வரை அதிகபட்ச மானியம் வழங்கப்படும். 2 கிலோவாட் வரையிலான அமைப்புகளுக்கு சுமார் ரூ.30,000 வரை உதவித்தொகை கிடைக்கும். சோலார் பேனல்கள் பொருத்திய பிறகு தேசிய கூரை சோலார் இணையதளத்தில் (National Rooftop Solar Portal) மானியத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும். மானியத் தொகை சுமார் ஒரு மாதத்திற்குள் நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன் சில முக்கிய ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, சமீபத்திய மின் கட்டண ரசீது, வசிப்பிடச் சான்று, வங்கி கணக்கு விவரங்கள், வீட்டின் கூரையின் புகைப்படம் மற்றும் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும். விண்ணப்ப செயல்முறையில் எந்த தடையும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஆவணங்களும் சரியாக மற்றும் புதுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
