மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை; இனி தமிழ்நாட்டுக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது? என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மேகதாது அணை விவகாரத்தை முன்வைத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் டி.கே. சிவகுமார் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நவம்பர் 16-ந் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging: A Journey of Love’ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் விஜய்யும் டி.கே.சிவகுமாரும் சந்தித்துப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், இருவரின் சந்திப்பு கவனம் பெற்றது.
இதனிடையே பெங்களூருவில் இன்று நவம்பர் 17-ந் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவகுமாரிடம், டெல்லியில் விஜய்யுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்தார்.
டிகே சிவகுமாரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும்:
கேள்வி: நேற்று சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் விஜய்யுடன் நீங்கள் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரைச் சந்தித்துப் பேசியது குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறதே?
டி.கே.சிவகுமார்: நிச்சயமாக நாங்கள் நண்பர்கள்தான். இதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அனைவரும் நண்பர்கள். நாங்கள் இந்தியர்கள். பொதுவாழ்வில் இருக்கிறோம். அவர்களுக்கென்று அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களுடைய நிலைமை என்ன என்பது அவர்களுக்குத் தெரியும்.
அதிமுக, திமுக அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். உச்சநீதிமன்ற உத்தரவை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? தமிழகத்திற்கு 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என்று உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாகக் கூறுகிறது. அது எங்களுடைய பொறுப்பு. அதை நாங்கள் நிறைவேற்றுவோம்.
தமிழகத்துக்கு வேற வாய்ப்பு இல்லை
அவர்களும் குறுக்கே அணைகளைக் கட்டுகிறார்கள். நாங்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காகத்தான் அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். திமுகவினர் பேசலாம், அதிமுகவினர் பேசலாம். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அவர்கள் மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார்கள். அதுவும் அவர்களுக்கு உதவவில்லை. இனி அவர்களுக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது?
மத்திய அமைச்சர்களுக்கு அடிப்படை அறிவு இல்லை
இந்த விவகாரத்தில் சில மத்திய அமைச்சர்கள் அர்த்தமற்ற கருத்துகளைப் பேசுவதைப் பார்க்கிறேன். மேகதாது அணை மாண்டியா, மைசூரு, ஹாசன், பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கும் தமிழகத்திற்கும் உதவும். சமநிலை நீர்த்தேக்கம் (Balancing Reservoir) என்றால் என்ன என்பது குறித்த அடிப்படை அறிவு அவர்களுக்கு இருக்க வேண்டும். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.









