தவெக மாநாடு : இரவோடு இரவாக தயாராகும் கொடிக்கம்பம்!

Published On:

| By vanangamudi

மதுரை மாநாட்டில் கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்த நிலையில், மீண்டும் அந்த இடத்தில் கம்பத்தை நிறுத்த இரவோடு இரவாக பணிகள் நடந்து வருவதாக தவெகவினர் கூறுகின்றனர்.

கடந்த அக்டோபரில் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இரண்டாவது மாநாடு நாளை (ஆகஸ்ட் 20) மதுரை பாரபத்தியில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

பேனர்கள் வைப்பது, கொடிக்கம்பங்கள் நடுவது, கொள்கை தலைவர்களின் பேனர்களை வைப்பது, மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கான தண்ணீர் வசதி, விஜய் நடந்து செல்ல ரேம்ப் வாக் மேடை, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ், மருத்துவ முகாம்கள் என ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாடு வெற்றி பெற வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) பாரபத்தில் புஸ்ஸி ஆனந்த் யாகம் செய்தார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று பிற்பகல், முக்கிய பணியான 100 அடி உயரத்தில் தவெக கொடிக்கம்பத்தை நிறுத்தும் பணி நடைபெற்றது.

அப்போது, தரைமட்டத்திலிருந்த பில்லருடன் கம்பத்தை இணைத்து போல்டு போட்டுக்கொண்டிருந்த போது பேலன்ஸ் இல்லாமல் சாய்ந்து விழுந்தது. இதனால் நாளைய மாநாட்டுக்கு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தவெக நிர்வாகிகளிடையே விசாரித்த போது, ”கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்த தகவலை கேள்விபட்ட விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை செய்திருக்கின்றனர். இதில், அந்த இடத்தில் நிரந்தரமாக கொடி கம்பம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவ்விடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் அமைக்கும் பணி இரவோடு இரவாக நடைபெறவுள்ளது” என்றனர்.

விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்த இடத்தில் 5 ஆண்டுகள் தவெக கொடி பறக்கும் வகையில் கம்பம் நடப்பட்டது. இதற்காக விவசாயி மணி என்பவரிடம் முன் தொகையாக ரூ.50,000 செலுத்தி ஒப்பந்தம் போடப்பட்டு மாதம் மாதம் ரூ.5000 தவெகவினரால் வழங்கப்படுகிறது. அதேபோன்று பராமத்தியில் கொடி கம்பம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதனால் நாளை விஜய் கொடி ஏற்றுவாரா, இல்லையா என்று குழப்பத்தில் இருந்த தவெக நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share