போலி புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு: ஆய்வு செய்ய மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி நியமனம்

By Pandeeswari Gurusamy

|

Published on 25 Nov 2026, 6:24 PM

Periyar arivulagam

தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜி. வெங்கட்ராமனை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிய ஆதாரங்களை ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கைகளை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பெரியார் அறிவு உலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யக் கோரி, திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் தொடர்ந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, “தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்குக் கடந்த 20 ஆண்டுகளாகப் புத்தகங்கள் கொள்முதல் செய்தது தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைக் கண்காணிக்க வேண்டும்” என்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, அந்த உத்தரவு நகல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனைப் பரிசீலித்த நீதிபதி, நூலகங்களுக்கு ரூ.1,645 விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்ட பல்வேறு புத்தகங்கள் குப்பை போல் இருப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்குக் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த புத்தகக் கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநருமான வெங்கட்ராமனை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிய ஆதாரங்களை ஆய்வு செய்து, அது குறித்து அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்குத் தனது கருத்துக்களைத் தெரிவிக்கவும் ஐ.பி.எஸ். அதிகாரி வெங்கட்ராமனுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேசமயம், ஐ.பி.எஸ். அதிகாரி வெங்கட்ராமனுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெங்கட்ராமன் தனது முதற்கட்ட அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து, போலி புத்தகங்கள் தொடர்பான வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel