கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் எஸ்.பி சிருஷ்டி சிங் தலைமையில் ஐ.ஜி மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் நிலையில், சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கனிமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது குறித்து தவெக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து காவல் துறைக்கு முறையான புகார் வரவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் பெற்று தகவல் அளிக்க நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
நேற்றைய விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட தகவல்களை எழுத்துப்பூர்வமாக காவல்துறை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், ஆட்சியர் அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஸ்டி சிங் வழக்கின் விசாரணை அதிகாரியாகச் செயல்படுவார். மேலும், ஐஜி காமினி இந்த வழக்கின் விசாரணையை மேற்பார்வையிடுவார் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கடந்த ஜூலை 31ம் தேதியே ஆட்சியர் புகார் அளித்தும் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என பலதரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னையில் இன்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நேற்று முன்தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் எஸ்.பி தலைமையில் ஐ.ஜி மேற்பார்வையில் விசாரணை நடத்துகிறோம். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் விசாரணையில் அழுத்தம் உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இந்த விவகாரத்தில் விசாரணை நியாயமான முறையில் நடைபெறும். சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.









